மத்ரஸா மாணவனின் மரணமானது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்துடன் புலன் விசாரணை முன்னெடுப்பு
மத்ரஸா பாடசாலை மாணவனின் மரணமானது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம அறிக்கையிட்டுள்ளார்.
இன்று (7) அம்பாறை பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற குறித்த மாணவனின் மரண விசாரணையின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மரணமடைந்த மாணவனின் சடலமானது சம்மாந்துறை பகுதியில் மார்க்க கடமைகள் நிறைவேற்றப்பட்ட பின்னர் பாதுகாப்பாக அவரது சொந்த ஊரான காத்தான்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் -1 சேனாரத்ன குறித்த மத்ரஸா பாடசாலைக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.இந்த விசாரணையில் சாய்ந்தமருது பொலிஸ் அதிகாரிகளான ஏ.எல்.எம் றவூப் ஆர் டபிள்யூ எம்.பி.ஜி.கே.எஸ்.மேகவர்ன உட்பட சாய்ந்தமருது வீதி போக்குவரத்து பொறுப்பதிகாரி எம்.யு .மஜீட் பொலிஸ் உத்தியோகத்தர் எஸ் .அக்பர் உடனிருந்தனர்.
மேலும் குறித்த மத்ரஸா மாணவனின் மரணமானது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்துடன் விசாரணை தொடர்ந்த வண்ணம் உள்ளது.அத்துடன் மாணவனின் மரண விசாரணைக்காக சாய்ந்தமருது பொலிஸாரால் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட மதரஸா நிர்வாகியாகிய மௌலவி கைது செய்யப்பட்டு மீண்டும் பொலிஸ் நிலையம் ஒன்றின் தடுப்பு காவலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் நாளை (8) கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜரபடுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.