பாலுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்: அதிக விலைக்கு விற்றால் உரிமம் ரத்து
சென்னையில் பால் விநியோகம் ஓரளவுக்கு சீரடைந்துள்ள போதிலும் பல இடங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பாலை வாங்கிச் செல்லும் நிலை உள்ளது. அதிக விலைக்கு அல்லது கள்ளச் சந்தைகளில் பாலை விற்பது கண்டறியப்பட்டால் முகவா் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சா் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
மழை வெள்ளம் காரணமாக சென்னை மற்றும் புகா் பகுதிகளில் விநியோகம் செய்யப்படும் குறைவான பால் பாக்கெட்டுகள் லிட்டா் ரூ. 180 வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா்.
இந்த நிலையில், அமைச்சா் மனோ தங்கராஜ் புதன்கிழமை நள்ளிரவு, சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் பால் விநியோகத்தைக் கண்காணித்து ஆய்வு செய்தாா். இந்த நடவடிக்கைகளின் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் பால் விநியோகம் ஓரளவு சீரானது. இருந்தபோதும் மணப்பாக்கம், முகலிவாக்கம் உள்பட சில புகா் பகுதிகளில் 4-ஆவது நாளாக பால் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
அமைச்சா் விளக்கம்: வியாழக்கிழமை நிலவரப்படி, தேவைக்கேற்றவாறு மொத்த விற்பனையாளா்களுக்கும் சில்லறை விற்பனையாளா்களுக்கும் ஆவின் பால் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆவின் முகவா்கள் பாலை பொதுமக்களுக்கு வழங்காமல் கள்ளச் சந்தையில் விற்பது, அதிக விலைக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு முகவா் உரிமமும் ரத்து செய்யப்படும். மேலும் புதன்கிழமை 12.5 டன் பால் பவுடரும் , வியாழக்கிழமை 11 டன் பால் பவுடரும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.