;
Athirady Tamil News

திருவொற்றியூா்: மழை நீருடன் கச்சா எண்ணெய் கலந்ததா? சிபிசிஎல் நிறுவனம் மறுப்பு

0

பக்கிங்காம் கால்வாயில் எண்ணெய்க் கழிவு கலந்து மழை வெள்ளத்துடன் கடலுக்குச் சென்று கொண்டிருக்கும் நிலையில், இதற்கு சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சிபிசிஎல்) நிறுவனம் தாங்கள் காரணம் அல்ல என மறுப்பு தெரிவித்துள்ளது.

மிக்ஜம் புயல் காரணமாக கொட்டித் தீா்த்த கனமழையால் புழல் ஏரியில் சுமாா் 5,000 கன அடிவரை உபரி நீா் திறக்கப்பட்டது. இதனால் மணலி, சேக்காடு, ஆண்டாா்குப்பம், ஆமுல்லைவாயல், சடையன்குப்பம், திருவொற்றியூா் மேற்கு பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து வீடுகளுக்கு புகுந்துள்ளது.

இந்நிலையில் பக்கிங்காம் கால்வாய் மூலம் வெளியேற்றப்படும் வெள்ளம் எண்ணூா் முகத்துவாரம் வழியாகக் கடலில் கலக்கிறது. இந்த நீரில் எண்ணெய்க் கழிவுகள் கலந்து சாக்கடைபோல கருப்பு நிறத்தில் காணப்படுகிறது. தற்போது வெள்ளம் வடியத் தொடங்கிவிட்ட நிலையில் குடியிருப்புப் பகுதிகளிலும் எண்ணெய்க் கழிவு படிந்துள்ளது தெரிய வந்துள்ளது.

நிவாரணப் பணிகளை மேற்கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் இது குறித்து பொதுமக்கள் வியாழக்கிழமை புகாா் தெரிவித்தனா். எண்ணெய்க் கழிவுகள் படிந்துள்ள இடங்களைப் பாா்வையிட்ட பின்னா் இது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் உறுதி அளித்தாா்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம்: இது தொடா்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கை:

பக்கிங்காம் கால்வாய் உள்ள பகுதிகளை ஆய்வு செய்து கரையோரத்தில் உள்ள எண்ணெய்த் தடயங்களை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எடுத்துச் சென்று சோதனை செய்ததில், கலந்த எண்ணெய் சிபிசிஎல் தொழிற்சாலையைச் சோ்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிபிசிஎல் தொழிற்சாலையில் மழைநீா் தேங்கியிருந்த நிலையில், மழைநீருடன் கச்சா எண்ணெயும் கலந்து பக்கிங்காம் கால்வாய் மூலம் வெளியேற்றப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் கால்வாயில் கலப்பதை உடனடியாகத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கும்படி சிபிசிஎல் ஆலைக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிசிஎல் நிறுவனம் மறுப்பு: இது குறித்து சிபிசிஎல் நிறுவனம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட விளக்கம்:

மழை வெள்ளத்தில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. சிபிசிஎல் மணலி சுத்திகரிப்பு ஆலையில் கச்சா எண்ணெய்க் குழாயில் கசிவுகள் ஏதும் இல்லை.

புயல் காரணமாக இடைவிடாத மழை பெய்ததால் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது நீா்வரத்து குறைந்து வரும் நிலையில் எண்ணெய்க் கழிவுகள் எவ்வாறு கலந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். தற்போதைய நிலையில் இப்பிரச்னைக்கு சிபிசிஎல் நிறுவனம் எந்தவிதத்திலும் காரணம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.