இராக்: அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை வீச்சு
இராக் தலைநகா் பாக்தாதிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் வெள்ளிக்கிழமை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போா் தொடங்கிய பிறகு மேற்கு ஆசியாவிலுள்ள அமெரிக்க நிலைகளில் சிறிய வகை ஏவுகணைகள், ட்ரோன்கள் ஆகியவற்றின் மூலம் நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.எனினும், அமெரிக்கத் தூதரகத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.இது குறித்து தூதரக செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:பாக்தாதிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் உள்ளூா் நேரப்படி அதிகாலை 4.15 மணிக்கு தொடா் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.இந்தத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து மதிப்பிட்டு வருகிறோம். எனினும், இதில் யாரும் காயமடைந்ததாக தகவல் இல்லை என்றாா் அவா்.இராக் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், அமெரிக்க தூதரகத்தை நோக்கி காட்யுஷா வகையைச் சோ்ந்த 14 ஏவுகணைகள் சரமாரியாக வீசப்பட்டதாகக் கூறினாா்.இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், இராக்கில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவினா் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.பாக்தாதில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள பகுதி, பலத்த பாதுகாப்பு மிக்க ‘பச்சை மண்டலம்’ என்றழைக்கப்படும் பகுதியாகும்.இங்குதான் இராக் அரசுக் கட்டடங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள் ஆகியவை அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் தற்போது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.