தரக்குறைவான உரப் பிரச்சினை தொடர்பில் விவசாய அமைச்சரின் மெத்தன போக்கு : சஜித் கண்டனம்
தரக்குறைவான உரப் பிரச்சினை தொடர்பில் தற்போதைய விவசாய அமைச்சர் கூட மெத்தனப்போக்கான மந்த கதியான செயற்பாட்டில் ஈடுபட்டு வருவது வருத்தமளிக்கும் விடயம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(08) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
கணக்காய்வு அறிக்கை
“கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கோப் குழுவுக்குச் செல்லும் போது அது தொடர்பான சட்ட நடவடிக்கை எடுப்பது தற்போதைய விவசாய அமைச்சரின் பொறுப்பாகும்.
கணக்காய்வு அறிக்கை சமர்ப்பித்து நடவடிக்கை எடுப்பதோடு, கணக்காய்வு அறிக்கையை முன்னிலைப்படுத்தி சட்டமா அதிபரிடமிருந்து இது குறித்த முழுமையான அறிக்கையைப் பெற்றுக் கொண்டு சட்ட நவடிக்கை எடுக்க அமைச்சருக்கு உரிமையுள்ளது.
இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்காததால் நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்காததற்கு தற்போதைய விவசாய அமைச்சரும் பொறுப்புக் கூற வேண்டும்.
இது பல மாதங்களாக தொடரும் பிரச்சினையாக இருப்பதால் இனியும் காலம் தாழ்த்தாமல் இப்பிரச்சினைக்கான தீர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும்.” என்றார்.