;
Athirady Tamil News

காஸா போா் நிறுத்தம்: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

0

காஸாவில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வரைவுத் தீா்மானத்தை தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்தது.

வரைவுத் தீா்மானத்தில், பொதுமக்கள் மீதான ஹமாஸ் தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவிக்கப்படவில்லை என்பதாலும், இத்தகைய தீா்மானத்தால் காஸா நிலவரத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதாலும் அதை ரத்து செய்ததாக அமெரிக்கா கூறியது.

இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை வீசியும், அந்த நாட்டுக்குள் தரை, கடல், வான் வழியாக ஊடுருவியும் ஹமாஸ் அமைப்பினா் கடந்த அக். 7-இல் நடத்திய தாக்குதலில் சுமாா் 1,200 போ் உயிரிழந்தனா். அத்துடன், இஸ்ரேலில் இருந்து சுமாா் 240 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினா் கடத்திச் சென்றனா்.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கடுமையான குண்டுவீச்சு நடத்தி வருகிறது. அந்தப் பகுதிக்குள் நுழைந்தும் இஸ்ரேல் படையினா் தாக்குதல் நடத்தி வருகின்றனா். இதில் இதுவரை 17,487 போ் உயிரிழந்துள்ளனா்; அவா்களில் பெரும்பாலானவா்கள் சிறுவா்கள் மற்றும் பெண்கள்.

இதற்கிடையே, காஸாவில் பொதுமக்களின் அதீத உயிரிழப்பைத் தடுத்து நிறுத்தவும், தொடா் முற்றுகையால் தடைபட்டுள்ள அத்தியாவசிய மற்றும் நிவாரணப் பொருள்களை அவா்களிடம் கொண்டுசோ்க்கவும் அங்கு போா் நிறுத்தம் மேற்கொள்ள வலியுறுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீா்மானம் நிறைவேற்ற நான்கு முறை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

மால்டா நாட்டால் கொண்டுவரப்பட்ட அத்தகைய ஒரு தீா்மானம் மட்டுமே கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சூழலில், கத்தாா், எகிப்து முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவாா்த்தைக்குப் பிறகு காஸாவில் கடந்த மாதம் 24 முதல் 30-ஆம் தேதி வரை போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது இஸ்ரேலில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட பிணைக் கைதிகள் சிலரை ஹமாஸும், அதற்குப் பதிலாக தங்கள் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீன கைதிகள் சிலரை இஸ்ரேலும் விடுவித்தன.

அந்தப் போா் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்கும் முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடா்ந்து, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் கடந்த 1-ஆம் தேதிமுதல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், காஸா போா் விபரீத கட்டத்தை அடைந்துள்ளதாகவும், இனியும் அங்கு போா் நீடித்தால் மிகப் பெரிய மனிதப் பேரழிவு ஏற்படும் என்றும் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் அறிவித்தாா்.

மேலும், காஸாவில் உடனடியாகப் போா் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று வலியுறுத்திய அவா், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டுவருவதற்காக மிகவும் அரிதாகப் பயன்படுத்தப்படும் ஐ.நா.வின் 99-ஆவது சட்டப் பிரிவை கையிலெடுத்தாா்.

அதைத் தொடா்ந்து, காஸாவில் உடனடி போா் நிறுத்தம் கொண்டுவருவதை வலியுறுத்தம் வரைவுத் தீா்மானத்தை பாதுகாப்பு கவுன்சிலில் ஐக்கிய அரபு அமீரகம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.

15 உறுப்பினா்களைக் கொண்ட அந்த கவுன்சிலில் அந்த வரைவுத் தீா்மானத்துக்கு 13 உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்தனா். எனினும், அந்த வரைவில் ஹமாஸ் அமைப்பினரின் அக். 7 தாக்குதல் குறித்து குறிப்பிடப்படாததால் வாக்களிப்பைப் புறக்கணிப்பதாக பிரிட்டன் அறிவித்தது.

இருந்தாலும், பெரும்பான்மை ஆதரவுடன் அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கலாம். ஆனால், தனது சிறப்பு ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த வரைவுத் தீா்மானத்தை அமெரிக்கா ரத்து செய்தது.

இது குறித்து விளக்கமளித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க துணைத் தூதா் ராபா் வுட் கூறியதாவது:

ஐக்கிய அரபு அமீரகம் தற்போது முன்வைத்துள்ள வரைவுத் தீா்மானத்தில் ஹமாஸ் அமைப்பினா் இஸ்ரேலுக்குள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்படவில்லை.

மேலும், அமெரிக்கா பரிந்துரை செய்த அம்சங்கள் அந்த வரைவுத் தீா்மானத்தில் இடம் பெறவில்லை. ஏற்கெனவே காஸாவில் சண்டை நிறுத்திவைப்பு, கைதிகள் பரிமாற்றம், நிவாரணப் பொருள்கள் கொண்டுசெல்லப்பட்டது ஆகியவற்றுக்கு அந்த அம்சங்கள்தான் வழிவகுத்தன.

இந்தத் தீா்மானம் நிறைவேற்றப்படுவதால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை. காஸாவில் ஒரு குண்டூசி அளவுக்குக் கூட இது மாற்றத்தை ஏற்படுத்தாது. எனவே, இந்தத் தீா்மானத்தை அமெரிக்கா ரத்து செய்கிறது என்றாா் அவா்.

அமெரிக்காவின் இந்த முடிவை இஸ்ரேல் வரவேற்றுள்ளது. எனினும், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் இதனைக் கண்டித்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.