மாதவிடாய் வலிக்கு இந்த மாத்திரை யூஸ் பண்றீங்களா? எச்சரிக்கும் இந்திய மருந்தக ஆணையம்
மாதவிடாய் வலி மற்றும் முடக்கு வாதத்திற்கு பயன்படுத்தப்படும் மெஃப்டால் (MEFTAL) வலி நிவாரணியை பயன்படுத்துவர்களுக்கும், பரிந்துரை செய்யும் மருத்துவர்களுக்கும் இந்திய மருந்தக ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மெஃப்டால் (MEFTAL)
வலி நிவாரணி மாதவிடாய் வலி மற்றும் முடக்கு வாதத்திற்கு பயன்படுத்தப்படும் மெஃப்டால் (MEFTAL) வலி நிவாரணியால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து ஆராய்வதற்கு சுகாதார நிபுணர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இந்திய மருந்தக ஆணையம் அறிவுறுத்தியது.
முடக்கு வாதம், கீல்வாதம், வீக்கம், காய்ச்சல், டிஸ்மெனோரியா, பல் வலி ஆகியவற்றிற்கு மெஃபெனாமிக் அமில (Mefenamic acid) வலி நிவாரணி பரிந்துரைக்கப்படுகிறது. இந்த நிலையில் தான் இந்திய மருந்தக ஆணையம் எச்சரிக்கை விடுத்தது.
பிவிபிஐ எனப்படும் இந்திய பார்மகோவிஜிலன்ஸ் புரோகிராமின் வெளியிட்ட தரவுகளின் படி, இந்த வலி நிவாரணியை எடுத்துக் கொண்டால் உடலில் எதிர்விளைவுகள் ஏற்படுவதாகவும், ஈசினோபிலியா (Eosinophilia) மற்றும் சிஸ்டமிக் சிண்ட்ரோம் (DRESS) நோய்க்குறியுடன் உள்ள மருந்து எதிர்விளைவுகள் ஏற்படுவதாகவும் கூறியது.
எதிர்விளைவுகள்
ஈசினோபிலியா மற்றும் சிஸ்டமிக் சிண்ட்ரோம் என்பது மருந்து எடுத்துக்கொண்ட 8 வாரத்தில் ரத்தத்தில் அளவுக்கதிமான வெள்ளை அணுக்கள் உருவாக வாய்ப்புள்ளது. மேலும், காய்ச்சல், தோல் எரிச்சல் ஆகியவை தோன்றவும் வாய்ப்புள்ளது.
இதனால், சுகாதார நிபுணர்கள், நோயாளிகள் ஆகியோர் மருந்தை உட்கொண்ட பின் எதிர்வினைகள் ஏற்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும். அப்படி, உங்களுக்கு ஏதாவது எதிர்வினை ஏற்பட்டால், பிவிபிஐயின் தேசிய ஒருங்கிணைப்பு மைய www.ipc.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது ஏடிஆர் பிவிபிஐ என்ற செயலியிலோ படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
அப்படி இல்லையென்றால் 1800-180-3024 என்ற எண்ணுக்கு அழைத்து தகவல் தெரிவிக்க வேண்டும். குறிப்பாக, மருத்துவர்கள் அறிவுரை இல்லாமல் வலி ஏற்படும் போதெல்லாம் இந்த மருந்தை உட்கொள்ள வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.