வெள்ளத்தில் காணாமல் போன ஆவணங்கள் : கட்டணமின்றி பெற தமிழக அரசின் சிறப்பு ஏற்பாடு
மிக்ஜாம் புயலால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முக்கிய ஆவணங்களை மீண்டும் பெறுவதற்கு தமிழக அரசு சிறப்பு முகாம்களை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் சிறப்பு ஏற்பாடு
சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பல பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பலரின் உடைமைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.
மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அனைத்தும் அடங்கும்.
இவற்றை மீண்டும் பெறும் வகையில் சிறப்பு முகாம்களை நடத்தி, கட்டணமின்றி அதனை வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
எனவே, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வரும் 11 ஆம் திகதியும், சென்னையில் 12 ஆம் திகதியிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும்.
மேலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம் மற்றும் நேரத்தை குறித்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தெரிந்துக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.