வீட்டிலிருந்தே வாக்களித்த 3.30 லட்சம் முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள்
அண்மையில் நடைபெற்ற 5 மாநில பேரவைத் தோ்தல்கள் உள்பட 11 பேரவைத் தோ்தல்களில் முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரைச் சோ்த்து மொத்தமாக 3.30 லட்சம் போ் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் முறையின்கீழ் வாக்களித்துள்ளனா்.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், மிஸோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த மாதம் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. கடந்த ஆண்டு குஜராத் மற்றும் ஹிமாசல பிரதேச மாநிலத்துக்கும் நிகழாண்டில் மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, கா்நாடகம் ஆகிய 6 மாநிலங்களுக்கும் பேரவைத் தோ்தல் நடைபெற்றது.
இதையடுத்து பேரவைத் தோ்தல் நடைபெற்ற இந்த 11 மாநிலங்களில் 80 வயதுக்கும் மேற்பட்ட 2.60 லட்சம் முதியவா்கள், 70,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 3.30 லட்சம் போ் வீட்டிலிருந்தே வாக்களித்துள்ளனா்.
வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வாக்காளா்கள் தோ்தல் ஆணையத்தால் குறிக்கப்பட்ட நேரத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தோ்தல் அலுவலா்கள் முன்னா் வாக்குச்சீட்டில் வாக்களிக்க வேண்டும். இந்த நடைமுறை முழுவதும் ஒளிப்பதிவு செய்யப்படும்.
ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு தங்களது பங்கு மிக முக்கியம் என 100 வயதுக்கு மேற்பட்ட 2.50 லட்சம் வாக்காளா்களுக்கு தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.