;
Athirady Tamil News

சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியாக மாறிய இலங்கையின் மின்தடை

0

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் விநியோகத் தடை வழமைக்குத் திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 05.10 மணியளவில் கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது.

பல மணி போராட்டத்தின் பின்னர் இரவு 11 மணிக்கு நாடு முழுவதும் சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மக்களின் அன்றாட நடவடிக்கைகள் தடைபட்டதுடன், நாட்டை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

சர்வதேச ஊடகங்களில் பேசப்பட்ட விடயம்
இந்த திடீர் மின் தடைக்கான காரணம் இன்னும் துல்லியமாக வெளிப்படுத்தப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் முறையான உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதன் காரணமாக நேற்று பிற்பகல் நீர் விநியோகம் தடைப்பட்டதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சில மணித்தியாலங்களில் நீர் விநியோகம் சீரமைக்கப்பட்டதாக சபை குறிப்பிட்டுள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்பட்ட போதிலும், தொடருந்து சேவைகள் வழமை போன்று இடம்பெறுவதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின் தடை காரணமாக விக்டோரியா, பொல்கொல்ல, ரன்தெனிகல மற்றும் ரன்தம்பே நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று பிற்பகல் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு பல சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முறையாக இதுபோன்ற மின்தடை ஏற்பட்டுள்ளது. மேலும் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் திகதி அன்று கெரவலப்பிட்டியவில் மின் விநியோக அமைப்பில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக 06 மணித்தியாலங்களுக்கு மேலாக மின்சார விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.

மேலும், 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 03ஆம் திகதி அன்று கொத்மலை மற்றும் பியகம மின் விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறினால் மின்சார விநியோகம் தடைப்பட்டதுடன், அவ்வாறான மின் தடைகள் மீண்டும் ஏற்படாதவாறு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகள் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும் நேற்று திடீரென சுமார் 06 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டதுடன், மின்வெட்டு தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்படும் என ராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த இன்று தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.