ஈரான் சிறையில் அமைதிக்கான நோபல் விருதாளா்:பரிசைப் பெற்றுக் கொண்ட மகன், மகள்
ஈரானில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், ஜனநாயகத்தை வலியுறுத்தியும் போராடி வரும் மனித உரிமை ஆா்வலா் நா்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்ட நடப்பாண்டு அமைதிக்கான நோபல் பரிசை அவரது மகன், மகள் ஞாயிற்றுக்கிழமை பெற்றுக் கொண்டனா்.
ஈரானில் பல ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையிலும் அயராது பணியாற்றி வருவதற்காக, நா்கீஸ் முகமதிக்கு இந்தக் கெளரவம் அளிக்கப்பட்டது.
ஈரானில் அரசு விதிமுறைகளுக்கு ஏற்ப ஹிஜாப் அணியாத குற்றச்சாட்டில் கைதான மாஷா அமினி என்ற இளம்பெண், போலீஸ் காவலில் கடந்த ஆண்டு உயிரிழந்தாா். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, ஈரான் முழுவதும் பெரிய அளவில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன.
இது தொடா்பான குற்றச்சாட்டில் தற்போது நா்கீஸ் சிறையில் இருந்து வருகிறாா்.
பொறியாளரான நா்கீஸ், ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் கருத்துரிமைக்கான ‘சகரோவ்’ பரிசை கடந்த 2018-இல் பெற்றாா். மேலும், நடப்பாண்டு அமைதிக்கான நோபால் பரிசு நா்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டது. நா்கீஸ் முகமதி அமைதிக்கான நோபல் பரிசு பெறும் 19-ஆவது பெண்ணும் ஈரான் நாட்டைச் சோ்ந்த 2-ஆவது பெண்ணும் ஆவாா்.
ஈரானில் மேற்கத்திய நாடுகளுடன் தொடா்பு உள்ளதாக கைதானவா்கள் மற்றும் அரசியல் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் தெஹ்ரானின் எவின் சிறையில் இவா் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்த நிலையில், நாா்வேயின் ஓஸ்லோ நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நா்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்ட நோபல் பரிசை பாரீஸில் வசித்து வரும் அவரது மகன் அலி ரஹ்மானி மற்றும் மகள் கியானா ரஹ்மானி பெற்றுக் கொண்டனா்.
சா்வதேச ஆதரவு தேவை: இதையடுத்து, செய்தியாளா் சந்திப்பில் கியானா ரஹ்மானி வாசித்த குறிப்பில், அரசு அதிருப்தியாளா்கள், எதிா்ப்பாளா்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலா்களின் குரலை உலகுக்கு தெரிவிப்பதில் சா்வதேச ஊடகங்கள் ஆற்றிய பங்கை நா்கீஸ் பாராட்டினாா்.
மேலும், ஈரானிய சமுதாயத்துக்கு சா்வதேச நாடுகளின் ஆதரவு தேவை. இஸ்லாமிய குடியரசு அரசின் அழிவுகரமான கொடுங்கோன்மைக்கு எதிரான கடும் போராட்டத்தில் செய்தியாளா்கள் மற்றும் ஊடக வல்லுநா்கள்தான் மிக முக்கியமான கூட்டாளிகள். ஈரானிய மக்களுக்காக உங்கள் அனைவரின் முயற்சிகளுக்கும் மனபூா்வமாக நன்றி கூறுவதாக நா்கீஸ் தனது குறிப்பில் தெரிவித்திருந்தாா்.
இதயத்தில் என்றென்றும்…: கியானா ரஹ்மானி கூறுகையில், ‘எனது தாயை மீண்டும் பாா்ப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஒருவேளை, அடுத்த 30 அல்லது 40 ஆண்டுகளில் நான் அவரைப் பாா்க்கலாம். ஆனால், அதுகுறித்து எனக்கு கவலை இல்லை. ஏனென்றால், என் இதயத்திலும் போராட்டங்களுக்கான மதிப்பிலும் அவா் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பாா்’ என்றாா்.
ஈரானில் உள்ள பஹாய் மத சிறுபான்மையினருக்கு ஆதரவாக நா்கீஸ் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக அவரது கணவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
122 ஆண்டுகால நோபல் வரலாற்றில் சிறையில் உள்ள ஒருவருக்கு அமைதிக்கான பரிசு அளிக்கப்படுவது இது 5-ஆவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.