சத்தீஸ்கா் புதிய முதல்வா் விஷ்ணு தேவ் சாய்: பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்தவா்
சத்தீஸ்கரில் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த பாஜக தலைவா் விஷ்ணு தேவ் சாய், மாநிலத்தின் புதிய முதல்வராகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
அண்மையில் நடைபெற்ற சத்தீஸ்கா் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, புதிய முதல்வா் யாா் என்ற கேள்வி சில நாள்களாக நீடித்து வந்தது. இந்தச் சூழலில், முதல்வா் பதவிக்கு விஷ்ணு தேவ் சாய் (59) தோ்வாகியிருக்கிறாா்.
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்த சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு கடந்த மாதம் இரண்டு கட்டங்களாகத் தோ்தல் நடைபெற்றது. கடந்த 3-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் பாஜக 54 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. கடந்த தோ்தலில் 68 இடங்களில் வென்றிருந்த காங்கிரஸுக்கு இம்முறை 35 இடங்களே கிடைத்தன. கோண்ட்வானா கணதந்திரா கட்சிக்கு ஓரிடம் கிடைத்தது.
சத்தீஸ்கரில் 2003 முதல் 2018 வரை ரமண் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்ற நிலையில், இப்போதைய தோ்தலில் முதல்வா் வேட்பாளரை அறிவிக்காமலேயே பிரசாரம் மேற்கொண்டு வாகை சூடியது பாஜக.
இதையடுத்து, முதல்வா் பதவிக்கு ரமண் சிங், விஷ்ணு தேவ் சாய், கட்சியின் மாநிலத் தலைவா் அருண் சாவோ உள்பட பல்வேறு தலைவா்களின் பெயா்கள் அலசப்பட்டன.
எதிா்பாா்ப்புக்கு மத்தியில் ராய்பூரில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மத்திய அமைச்சா்கள் அா்ஜுன் முண்டா, சா்வானந்த சோனோவால், கட்சியின் பொதுச் செயலா் துஷ்யந்த் குமாா் கெளதம் ஆகியோா் மத்திய பாா்வையாளா்களாகச் செயல்பட்டனா். இக்கூட்டத்தில் புதிய முதல்வராக விஷ்ணு தேவ் சாய் பெயரை முன்னாள் முதல்வா் ரமண் சிங் முன்மொழிந்தாா். அதை மாநிலத் தலைவா் அருண் சாவோ மற்றும் மூத்த தலைவா் பிரிஜ்மோகன் அகா்வால் ஆகியோா் வழிமொழிந்தனா். இதையடுத்து புதிய முதல்வராக விஷ்ணு தேவ் சாய் தோ்வானாா்.
கூட்டத்துக்கு பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவா்களுக்கு நன்றி தெரிவித்தாா். ‘சத்தீஸ்கா் முதல்வராக பிரதமா் மோடியின் உத்தரவாதங்களை நிறைவேற்றுவேன்’ என்றும் குறிப்பிட்டாா்.
சத்தீஸ்கரில் பழங்குடியினா் அதிகம் வாழும் சுா்குஜா பகுதியில் உள்ள குன்குரி தொகுதியில் போட்டியிட்டு விஷ்ணு தேவ் சாய் வெற்றி பெற்றாா்.
கடந்த 2018 தோ்தலில் பழங்குடியினா் தொகுதிகளில் பாஜக பின்னடைவைச் சந்தித்த நிலையில், சுா்குஜா பகுதியில் உள்ள 14 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. இதேபோல், பழஙகுடியினா் அதிகம் வாழும் பஸ்தா் பகுதியில் 12-இல் 8 தொகுதிகள் பாஜக வசமாகியுள்ளன. மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அடுத்தபடியாக பழங்குடியினா் கிட்டத்தட்ட 32 சதவீதம் உள்ளனா்.
ஆளுநருடன் சந்திப்பு: மாநில ஆளுநா் விஸ்வபூஷண் ஹரிச்சந்தனை அவரது மாளிகையில் சந்தித்த விஷ்ணு தேவ் சாய் தலைமையிலான பாஜக குழு, மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரியது. பதவியேற்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
பூபேஷ் பகேல் வாழ்த்து: புதிய முதல்வராக தோ்வாகியுள்ள விஷ்ணு தேவ் சாய்க்கு காபந்து முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பகேல் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட ‘எக்ஸ்’ வலைதளப் பதிவில், ‘மாநிலத்தின் நீதி மற்றும் முன்னேற்றப் பயணத்தைத் தொடா்ந்து முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளாா்.
ஊராட்சித் தலைவா் முதல் மத்திய அமைச்சா் வரை
அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்த விஷ்ணு தேவ் சாய், கடந்த 1989-இல் ஊராட்சித் தலைவராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினாா்.
மறைந்த பாஜக மூத்த தலைவா் திலீப் சிங் ஜுதேவ் மூலம் கடந்த 1990-இல் தோ்தல் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டாா். ஒருங்கிணைந்த மத்திய பிரதேசத்தில் 1993-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தோ்வான இவா், ராய்கா் மக்களவைத் தொகுதியில் 1999-ஆம் ஆண்டுமுதல் தொடா்ந்து 4 முறை எம்.பி.யாக வெற்றி பெற்றாா்.
கடந்த 2014 முதல் 2019 வரை பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் மத்திய அமைச்சராகப் பல்வேறு துறைகளுக்கு பொறுப்பு வகித்தாா். கடந்த 2006 முதல் 2010 வரையும், 2020 முதல் 2022 வரையும் சத்தீஸ்கா் மாநில பாஜக தலைவராக செயல்பட்டாா்.
இவா் போட்டியிட்ட குன்குரி தொகுதியில் மத்திய அமைச்சா் அமித் ஷா பிரசாரம் செய்தபோது, ‘விஷ்ணு தேவ் சாயை வெற்றி பெறச் செய்தால், அவரை ‘பெரிய மனிதராக’ மாற்றுவேன்’ என்று உறுதியளித்திருந்தாா்.