;
Athirady Tamil News

ஜம்மு காஷ்மீர்: மோடியை மகிழ்ச்சிப்படுத்திய உச்ச நீதிமன்றம்

0

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 நீக்கம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ நீக்கிய மத்திய அரசு, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதியரசர்கள் மூன்று விதமான தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.

தலைமை நீதியரசர் சந்திரசூட், நீதியசர்களான பி.ஆர். கவாய், சூர்யகாந்த் ஆகியோர் ஒரு தீர்ப்பையும் நீதியரசர்களான எஸ்.கே.கவுல் ஒரு தீர்ப்பையும், நீதிபதி சஞ்சீவ் கண்ணா வேறொரு தீர்ப்பையும் வழங்கியுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது என்பதுடன், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஏனைய மாநிலங்களில் இருந்து வேறுபட்ட இறையாண்மையை கொண்டிருக்கவில்லை என தலைமை நீதியரசர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ஆட்சி நடைபெறும்போது மாற்ற முடியாத அதிகாரத்தை செயல்படுத்தும் நடவடிக்கையை எடுக்க முடியாது என்ற வாதத்தை ஏற்க முடியாது எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கான அரசியலமைப்பு சட்டம் அனைத்தும் ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும் என்பதுடன், குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு இருக்கும்போது ஒன்றிய அரசு எடுக்கும் முடிவுகளை கேள்விக்கு உள்ளாக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காஷ்மீருக்கு தனி ஆட்சி உரிமை இல்லை என்பதுடன், இந்திய அரசியலமைப்போடு இணைந்ததுதான் காஷ்மீர் அரசியலமைப்பு எனவும் தலைமை நீதியரசர் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் மூன்று தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும் ஒரே தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தலைமை நீதியரசர் சந்திரசூட் தெரிவித்தார்

பின்னர் ஒட்டுமொத்தமாக சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 நீக்கியது செல்லும் என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது..

மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட விடயத்தில் தாம் தலையிட விரும்பவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

எனினும் மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

இது தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது, 2019 ஆகஸ்ட் 5ல் நாடாளுமன்றம் எடுத்த முடிவு அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தீர்ப்பானது நம்பிக்கையின் கலங்கரை விளக்கம். ஒன்றுபட்ட இந்தியாவை கட்டியெழுப்பும் உறுதிப்பாட்டின் சான்று என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.