உலக தமிழர் பேரவையை ஈ.பி.டி.பி யினர் வரவேற்கின்றார்களாம்
உலக தமிழர் பேரவையின் வருகை போலி தேசியம் பேசுகின்ற சில குழுக்களுக்கு தடையாக இருக்கலாம். ஆனால் எம்மைப் பொறுத்தவரை புலம்பெயர் அமைப்புகள் யாரும் வரலாம் அவர்களை வரவேற்க நாம் தயாராகவே இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தற்போது வந்துள்ள உலக தமிழர் பேரவை இதே இமாலய திட்ட செயற்பாட்டை கடந்த காலங்களில் முயற்சித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
நாம் வெளிப்படையாக யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்திலும் அழிவு யுத்தத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு இரு தரப்புக்கும் கோரிக்கை விடுத்திருந்தோம். அப்போது இந்த பேரவை என்ன செய்தார்கள் என்பதையும் இவர்கள் சுயவிமர்சனம் செய்ய வேண்டும்.
இன்று வந்தவர்கள் இதே செயற்பாட்டுடன் கடந்த காலங்களில் பங்காற்ற முயற்சித்திருந்தால் அழிவு யுத்தத்தை தடுத்திருக்க அழுத்தத்தையாவது கொடுத்திருக்கலாம்.
ஆனாலும் காலம் கடந்து தாயகத்துக்கு வந்து இவ்வாறு அக்கறை கொண்டதில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். அது மட்டுமல்லாது அவர்கள் அரசியல் ரீதியாகவும் விரும்பினால் பங்காற்றலாம்.
உலக தமிழர் பேரவை போல ஏனைய பல அமைப்புகளும் முன்வர ஆர்வமாக இருக்கின்றார்கள். ஆயினும் அவ்வாறு வந்தால் தங்களை புலம்பெயர் தேச ஏனைய அமைப்புகள் துரோகிகள் என வர்ணிப்பார்கள் என்ற தயக்கமும் அவர்களிடம் இருக்கின்றது.
இதேநேரம் புலம்பெயர் அமைப்புகள் எமது நாட்டின் அபிவிருத்தியில் ஈடுபட வேண்டும். பொருளாதாரத்த கட்டியெழுப்ப வேண்டும். அதுமட்டுமல்லாது ஜனநாயக தேர்தல் அரசியல் நீரோட்டத்திலும் பங்காற்ற வேண்டும் என்பதே எமது கட்சியின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆனால் சில அமைப்புகள் விமர்சனங்களை வைத்தாலும் குறித்த பேரவையினுடைய வருகை ஒரு நாடு இருதேசம் என கோசமிடும் குழுவொன்று தமது இருப்புக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால் அவர்களின் வரவை விரும்பியிருக்கவில்லை என்பது ஊடகங்களில் வரும் அவர்களின் அறிக்கைகளூடாக தெரிந்துகொள்ள முடிகின்றது.
எமது இனப் பிரச்சினைக்கான தீர்வை தேசிய நல்லிணக்கத்தின் ஊடாகத்தான் அணுக வேண்டும் என்பதை உலக தமிழர் பேரவையின் நகர்வும் எடுத்தியம்புகின்றது.
எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக பல்வேறு பிரச்சினைகளை சாதுரியமாக முன்னெடுத்து வருகின்றார். ஆனால் எம்மிடம் அரசியல் பிரதிநிதித்துவப் பலம் போதியளவில் இல்லை. அது மற்றவர்களிடம் உள்ளது.
ஆகவே தேசிய நல்லிணக்கம் உள்ளவர்களிடம் அரசியல் பலமும் இருந்தால் பல விடயங்களை சாதித்திருக்கலாம். எதிர்ப்பரசியலால் எதையும் சாதிக்க முடிந்ததா? என பின்னோக்கிப் பார்த்தால் அவ்வாறு குறிப்பிட்டெதனையும் கூறமுடியாது.
எனவேதான் தேசிய நல்லிணக்கமுள்ளவர்களிடம் அரசியல் பலம் வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.