தெருக்களில் Bleaching Powder-க்கு பதில் மைதா மாவை தூவிய ஊழியர்கள்
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதியில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக மைதா மாவை ஊழியர்கள் தூவிய சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பாதிப்புகள் சீரமைப்பு
சென்னையை அடுத்த செங்குன்றத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளை நாரவாரிக்குப்பம் பேரூராட்சி மேற்கொண்டு வந்தது.
அதன்படி, நேற்று காலை தெருக்களில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து கிருமிநாசினி பவுடர் தூவும் பணியை தூய்மை பணியாளர்கள் செய்து வந்தனர். இதனால், கொசு, பூரான், பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் அச்சுறுத்தல்கள் இருக்காது என பொதுமக்கள் நினைத்தனர்.
செங்குன்றம், டாக்டர் வைத்தீஸ்வரன் தெரு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சுற்றுவட்டாரங்களில் கிருமிநாசினி பவுடர் தூவப்பட்டது.
மைதா மாவு
அப்போது அங்குள்ள மக்களுக்கு சந்தேகம் எழுந்தது. தெருக்களில் தூவப்பட்ட பவுடரை கையில் எடுத்து பார்த்த போது, எந்த உறுத்தலுமின்றி இருந்தது. மேலும், அதில் மைதா மாவின் வாசம் வந்துள்ளது.
பின்னர், துாய்மைப் பணியாளர்கள் கொண்டு வந்த மூட்டையை சோதித்த போது பிளீச்சிங் பவுடருக்கு மாற்றாக மைதா மாவு இருந்தது. அவர்களிடம் இதுகுறித்து விசாரித்த போது பேரூராட்சி அதிகாரிகள் கொடுத்ததை தான் நாங்கள் தூவி வருகிறோம் எனக் கூறினர்.