காஸாவில் 25 மருத்துவமனைகள் முடக்கம்
நியூயாா்க் / காஸா சிட்டி: காஸாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் 25 மருத்துவமனைகளின் செயல்பாடுகள் இஸ்ரேல் தாக்குதலால் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
எஞ்சியுள்ள 11 மருத்துவமனைகளும் ஓரளவு மட்டுமே செயல்படுவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
இது குறித்து ஐ.நா. பத்திரிகையாளா்கள் சந்திப்பில் காஸாவிலிருந்தபடி உலக சுகாதார அமைப்பின் ரிச்சா்ட் பீப்பா்காா்ன் கூறியதாவது:
காஸாவிலுள்ள 3-இல் ஒரு பகுதிக்கும் குறைவான மருத்துவமனைகள்தான் ஓரளவுக்கு இயங்கி வருகின்றன.
வெறும் 66 நாள்களில் காஸாவின் சுகாதாரக் கட்டமைப்பு குலைக்கப்பட்டுவிட்டது. அதற்கு முன்னா் இயங்கி வந்த 36 மருத்துவமனைகளில் 25 மருத்துவமனைகள் செயல்படமுடியாமல் முடங்கியுள்ளன. வடக்கு காஸாவில் ஒன்று, தெற்கு காஸாவில் 10 என மொத்தம் 11 மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. அவையும் முழுமையாக இயங்கவில்லை.
காஸாவில் நடத்தப்படும் தாக்குதலால் மருத்துவமனைகளும், பிற சுகாதாரக் கட்டமைப்புகளும் இதற்கு மேலும் நிலைகுலைந்தால் அது தாங்கமுடியாத துயரத்தை ஏற்படுத்தும். அத்தகைய கொடுமையான நிலை ஏற்படக்கூடாது என்று வேண்டுகிறோம் என்றாா் அவா்.
இஸ்ரேலுக்குள் கடந்த அக். 7-ஆம் தேதி ஊடுருவி தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினா், அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். அத்துடன், பெண்கள், குழந்தைகள் உள்பட சுமாா் 240 பேரை அங்கிருந்து பிணைக்கைதிகளாகக் கடத்தச் சென்றனா்.
அதையடுத்து, ஹமாஸ் அமைப்பை முழுமையாக ஒழித்தக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா மீது தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தத் தாக்குதலின்போது மருத்துவமனைகளும் குறிவைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இருந்தாலும், காஸா மருத்துவமனைகளை ஹமாஸ் அமைப்பினா் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் கூறியது.
இந்தச் சூழலில், இஸ்ரேலின் தொடா் தாக்குதலால் காஸா பகுதியிருந்த 25 மருத்துவமனைகளின் செயல்பாடு முடங்கிவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தற்போது தெரிவித்துள்ளது.
18,412-ஆக உயா்ந்த காஸா உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் படையினா் கடந்த அக். 7-ஆம் தேதி முதல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 18,412-ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸா பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 207 போ் உயிரிழந்தனா்; சுமாா் 450 போ் காயமடைந்தனா்.
இத்துடன், கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 18,412-ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 50,100-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.