காசாவில் 10% மேற்பட்ட இஸ்ரேலிய வீரர்கள் பலியானது இப்படி தான்! இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
காசாவில் 10 சதவீதத்திற்கும் அதிகமான இஸ்ரேலிய வீரர்கள் தவறுதலான விபத்துக்களால் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் பாலஸ்தீன போர்
இஸ்ரேல் பாலஸ்தீன போரானது கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது, இதில் 6,150 குழந்தைகள் உட்பட மொத்தம் 15,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக காசா சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.
அதே சமயம் இஸ்ரேலில் அக்டோபர் 7ம் திகதி நடந்த தாக்குதலில் குறைந்தபட்சமாக 1,200 பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் காசாவில் தரைவழி தாக்குதலை முன்னெடுத்த இஸ்ரேலிய வீரர்கள் 10% பேர் தவறுதலான விபத்துக்கள் மற்றும் நட்பு ரீதியான தாக்குதலில் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை விவரங்களை மேற்கோள்காட்டி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் தகவல் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய வீரர்களின் இறப்பு எண்ணிக்கை
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தரைவழி தாக்குதலில் இதுவரை 105 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் எதிர்பாராத விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.
காசாவில் நடத்தப்பட்ட வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலின் போது 13 இஸ்ரேலிய வீரர்கள் தவறுதலாக அடையாளம் காணப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஆயுத கோளாறு காரணமாக 2 வீரர்களும், வாகன விபத்துக்களில் இன்னும் பலரும் உயிரிழந்து இருப்பதாக இராணுவ செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.