;
Athirady Tamil News

ஹமாஸ் 12 முறை சுட்டும் உயிர் தப்பிய இஸ்ரேலிய பெண் இராணுவ அதிகாரி

0

ஹமாஸ் அமைப்பு 12 முறை சுட்டும் தான் உயிர் பிழைத்தது குறித்து இஸ்ரேலிய பெண் இராணுவ அதிகாரி தன்னுடைய மயிர் கூச்செறியும் அனுபவத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இஸ்ரேல் பெண் இராணுவ அதிகாரி ஈடன் ராம் தெரிவிக்கையில்,

“கடந்த ஒக்டோபர் 7. சனிக்கிழமை. ஹமாஸ் தீவிரவாதிகள் எங்கள் இராணுவத் தளத்தை நெருங்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். என்னுடைய காலில் குண்டடிபட்டது. காலில் குண்டுடன், நான் அந்த இடத்திலிருந்து நகர்ந்து, அருகில் இருந்த அறைக்குச் சென்றேன். அந்த அறையில் என்னோடு சேர்த்து ஏழு அதிகாரிகள் இருந்தோம்.

ஹமாஸ் குழுவினர் சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்
எங்கள் அறையை ஹமாஸ் குழுவினர் சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். குண்டுகள் எங்களைத் துளைத்தன. நான் இரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தேன். என் அருகே என் சக அதிகாரிகள் குண்டடிபட்டு விழுந்து கிடந்தனர். அறையெங்கும் இரத்தம். நான் உயிரோடு இருக்கிறேனா அல்லது இறந்து விட்டேனா என்பதை என்னால் உணர முடியவில்லை.

உண்மையில், அப்போது நான் இறந்துகொண்டிருந்தேன். இறுதிகுண்டுக்காக காத்துக்கொண்டிருந்தேன். என் சக அதிகாரிகள் எத்தனை பேர் இறந்துவிட்டனர் என்று தெரியவில்லை. தீவிரவாதிகள் ஒவ்வொரு உடலாக சோதித்துக்கொண்டிருந்தனர். நான்கு மணி நேரம் நான் அப்படியே உறைந்து கிடந்தேன். தீவிரவாதிகள் அறையை விட்டு வெளியேறினர்.

திடீரென்று என் அருகே என் தோழியும் சக அதிகாரியுமான சாஹரின் மூச்சுக்காற்றை உணர்ந்தேன். அந்த தாக்குதலில் அவர் உயிர் தப்பி இருந்தார். அவர் தன்னுடைய சீருடையை கழற்றி எனக்கு முதலுதவி செய்தார். நான் என் உடலில், எங்கெல்லாம் அடிபட்டு இருக்கிறது, எங்கிருந்து இரத்தம் வருகிறது என்று ஒவ்வொரு பகுதியாக தொட்டுப்பார்க்க ஆரம்பித்தேன்.

இன்று உயிரோடு இருப்பது ஒரு அதிசயம்தான்
என் உடல் என் வசம் இல்லாததுபோல் உணர்ந்தேன். பேச்சு எழவில்லை. என்னை அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். 12 முறை சுடப்பட்ட நான் இன்று உயிரோடு இருப்பது ஒரு அதிசயம்தான்” என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் 48 மணி நேரத்துக்கு அவருக்கு மிகத் தீவிர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் உடல்நலம் தேறியுள்ளார். அவரது இராணுவ சேவையை கௌரவிக்கும் விதமாக கடந்த வாரம் இஸ்ரேல் அரசு அவருக்கு விருது வழங்கியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.