ஹமாஸ் தாக்குதலில் 9 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழப்பு
ராஃபா: காஸா சிட்டியில் ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த 2 உயரதிகாரிகள் உள்ளிட்ட 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
காஸா சிட்டியின் புறநகர்ப் பகுதியான ஷெஜெய்யாவில் கடந்த சில நாள்களாக இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் படையினருக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.
அந்தச் சண்டையின்போது காயமடைந்த 4 இஸ்ரேல் வீரர்களை மீட்பதற்கான நடவடிக்கை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது. அந்த நடவடிக்கையின்போது கோலானி படைப் பிரிவு தளபதி டோமர் கிரீன்பர்க் உள்ளிட்ட 2 உயரதிகாரிகள், 7 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
காஸாவில் நடைபெற்று வரும் தரைவழித் தாக்குதலில் தங்களது வீரர்கள் உயிரிழந்து வருவதாக இஸ்ரேல் ராணுவம் அவ்வப்போது கூறினாலும், அந்தப் பகுதியில் தங்களது படையினர் வெற்றிகரமாக முன்னேறி வருவதாகக் கூறி வருகிறது.
மேலும், ஹமாஸ் பயங்கரவாதிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு தங்களிடம் சரணடைந்து வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறி வருகிறது.
ஆனால், ஒரே தாக்குதலில் 9 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளது ராணுவம் கூறுவதை சந்தேகத்துக்கு உள்ளாக்குவதாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேலுக்குள் கடந்த அக். 7}ஆம் தேதி ஊடுருவி தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர், அங்கு சுமார் 1,200 பேரை படுகொலை செய்தனர். அத்துடன், பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 240 பேரை அங்கிருந்து பிணைக்கைதிகளாகக் கடத்தச் சென்றனர்.
அதையடுத்து, ஹமாஸ் அமைப்பை முழுமையாக ஒழித்தக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா மீது கடுமையான குண்டுவீச்சு நடத்தி வருவதுடன், தரைவழியாகவும் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், 18,608 பேர் உயிரிழந்துள்ளனர்.
காஸாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய 100}க்கும் மேற்பட்ட இஸ்ரேல் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.