மூன்று நாட்களில் 14 பேர் மாயம் : ஒருவர் சடலமாக மீட்பு
இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் கடந்த மூன்று நாட்களில் 5 சிறுவர்கள் உட்பட 14 பேர் காணாமல் போயுள்ளதுடன் அவர்களில் வயோதிபப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மொறட்டுவைப் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவன், பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மாணவன், தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவன், ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவி, நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஆகியோர் காணாமல் போன சிறார்களில் அடங்குகின்றனர்.
காணாமல் போனவர்களில் நுவரெலியாவைச் சேர்ந்த 18 வயது யுவதியும், பொத்துவிலைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதியும், எடரமுல்லையைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரும், அநுராதபுரத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞரும் அடங்குகின்றனர்.
அதேவேளை, மொறட்டுவையைச் சேர்ந்த 75 வயதுடைய ஆணும், பள்ளம பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான கூலித்தொழிலாளியும், கஹதுடுவ பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய ஆணும், புத்தளத்தைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணும் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நோர்வூட் பிரதேசத்தில் காணாமல்போன வயோதிபப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எல்பட மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 80 வயதான முத்து வீரம்மன் என்பவரே தோட்டத்தின் கால்வாய் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.