2017ல் காணாமல் போன பிரித்தானிய சிறுவன்: 6 வருடங்களுக்கு பிரான்ஸில் கண்டுபிடிப்பு: மர்மமான பின்னணி
2017 முதல் காணாமல் போன பிரித்தானிய சிறுவன் 6 வருடங்களுக்கு பிறகு பிரான்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
6 வருடங்களுக்கு பிறகு
பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள ஓல்ட்ஹாம்(Oldham) பகுதியை சேர்ந்த அலெக்ஸ் பாட்டி(Alex Batty) என்ற சிறுவன் கடந்த 2017ம் ஆண்டு தன்னுடைய தாய் மற்றும் தாத்தாவுடன் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
11 வயதில் சுற்றுலாவுக்கு சென்ற அலெக்ஸ் பாட்டி(Alex Batty) பின்னர் பிரித்தானியாவுக்கு திரும்பவே இல்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு காணாமல் போன பிரித்தானிய சிறுவன் பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதி நகரான துலூஸ்(Toulouse) அருகில் ரேவல்(Revel) என்ற நகரில் புதன்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சிறுவனின் அடையாளங்கள் குடும்பத்தினரால் சரிபார்க்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாக பிரான்ஸ் வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் சிறுவன் விரைவில் பிரித்தானியாவிற்கு அனுப்பப்பட இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவனை கடத்திய தாய்
இதற்கிடையில் பிரான்ஸ் நாட்டு ஊடகத்திடம் பேசிய சிறுவனை கண்டுபிடித்த மருத்துவ மாணவர், அலெக்ஸை கடும் மழைக்கு நடுவே நடந்து சென்று கொண்டு இருக்கும் போது கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளார்.
அப்போது மருத்துவ மாணவரிடம் பேச தொடங்கிய அலெக்ஸ், இங்கிலாந்துக்கு செல்வதற்காக இந்த மலைத் தொடர்களில் 4 நாட்களாக நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் தான் தன்னுடைய தாயால் கடத்தப்பட்டதாகவும், பிரான்ஸுக்கு 2021ம் ஆண்டு வருவதற்கு முன்பு ஸ்பெயின் நாட்டில் உள்ள சொகுசு வீடு ஒன்றில் 10 கொண்ட ஆன்மீக சமூகத்துடன் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுவன் தொடர்பான விவரங்களை பொலிஸ் அதிகாரிகள் தற்போது விசாரிக்க தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.