Nijjar விவகாரம்: இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகள் கனடாவில் என்ன செய்கிறார்கள்? அமித் ஷா ஆவேசம்
மற்ற நாடுகளில் இந்தியாவுக்கு எதிராக சதி செய்ய அனுமதிக்க மாட்டோம் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோ பேட்டி
கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தியா மற்றும் கனடாவிற்கு இடையே மோதல் நீடித்து வருகிறது.
இந்நிலையில்,கனட செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “சீக்கிய தலைவரின் கொலைக்கு பிறகு கனடாவில் இருக்கும் பிற நாட்டவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து இருப்பது போன்ற பிம்பம் ஏற்பட்டது. இதனால், மக்கள் பாதுகாப்பற்ற மனநிலையில் இருந்தார்கள்.
இதனால், எங்களது மக்களின் நம்பிக்கைக்கும், பாதுகாப்பிற்கும், அமைதிக்கும் இதுகுறித்து பேசினோம். இந்த கொலைக்கு பின்னால் இந்திய அரசு இருப்பதை நாங்கள் அறிவோம் அல்லது நாங்கள் நம்புவதற்கு காரணங்கள் உள்ளன. இந்த மாதிரி சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை ஏற்பட்டுள்ளது” என்றார்.
அமித் ஷா பேசியது
இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகள் கனடாவில் என்ன செய்கிறார்கள். இதற்கு கனடா பதிலளிக்க வேண்டும். வெளிநாடுகளில் கொலைகள் செய்வது இந்திய கொள்கைகள் அல்ல.
இந்தியாவில் எந்த நாட்டுக்கும் எதிராகச் சதி செய்ய அனுமதிக்க மாட்டோம். அதே போல மற்ற நாடுகளிலும் இந்தியாவுக்கு எதிராக சதி செய்ய அனுமதிக்க மாட்டோம்” எனக் கூறியுள்ளார். இதனிடையே, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பான கனடாவின் குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்துள்ளது.