;
Athirady Tamil News

உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு : நெருக்கடிக்குள்ளாகி தவிக்கும் மன்னார் பொது வைத்தியசாலை!

0

இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பினால் மன்னார் பொது வைத்தியசாலையின் பிராந்திய சுகாதார கழிவகற்றல் நிலையம் சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பின் காரணமாக மன்னார் நகரசபைக்கு சொந்தமான பாப்பாமோட்டை பகுதியில் அமைந்துள்ள திண்ம கழிவு முகாமைத்துவ நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் நகரசபையினால் திண்மக்கழிவு மற்றும் மலக்கழிவு அகற்றும் செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் பத்து நாட்களுக்கு மேலாக மருத்துவக்கழிவு,உணவுக்கழிவு மற்றும் மலக்கழிவுகள் அகற்றப்படாமையினால் மன்னார் பொது வைத்தியசாலைக்குரிய பிராந்திய சுகாதார கழிவகற்றல் நிலையம் சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாகியுள்ளதுடன் துர்நாற்றமும் வீசி வருகின்றது.

விடுதிகளை மூடவேண்டிய நிலை
அதே நேரம் நோயாளர் விடுதிகளில் உள்ள மலசல கூடங்கள் நிறைந்து வழிவதனால் விடுதிகளை நோயாளர்கள் பயன்படுத்த முடியாத நிலைகாணப்படுவதுடன் மழை காரணமாக டெங்கு நோய் பெருகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக கழிவகற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாத பட்சத்தில் விடுதிகளை மூடவேண்டிய நிலை ஏற்படும் என்பதுடன் ஏற்கனவே சேகரிக்கப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்ட குப்பைகளினால் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பும் காணப்படுகின்றது

வைத்தியசாலை மாத்திரமின்றி பொது இடங்கள்,வீடுகள்,அலுவலகங்கள் உணவகங்களிலும் குப்பைகள்,அகற்றப்படாத நிலையே காணப்படுகின்றது எனவே குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,அரச அதிகாரிகள்,ஆளுனர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் தீர்வை வழங்க முடியாத பட்சத்தில் மாற்றுவழிகளையாவது மேற்கொண்டு தருமாறு மன்னார் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.