ஐரோப்பாவில் ஹமாஸ் ஆதரவாளர்கள் உட்பட 7 பேர் கைது
ஐரோப்பாவில் உள்ள யூத நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக டென்மார்க், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஹமாஸ் உறுப்பினர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர்7-ம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை காசா நகர் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட அப்பாவி பொதுமக்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.
சர்வதேச அளவில் இருந்து போர் நிறுத்தத்துக்கான அழுத்தம் அதிகரித்து வருகிறது. ஆனாலும் காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து சண்டையிடும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஐரோப்பாவில் உள்ள யூத நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக சந்தேகத்தின் பேரில் டென்மார்க், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஹமாஸ் உறுப்பினர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் மூன்று பேர் ஜெர்மனி தலைநகர் பெர்லினிலும், மற்றொருவர் நெதர்லாந்திலும், மூவர் டென்மார்க்கிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மூன்று கைது நிகழ்வுகளுக்கும் இடையே ஏதேனும் தொடர்புகள் உள்ளனவா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தில் கைது செய்யப்பட்ட நால்வருக்கும் ஹமாஸ் இயக்கத்துடன் நேரடி தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
டென்மார்க்கில் கைது செய்யப்பட்ட மூவரும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெர்மனி சட்டத்துறை அமைச்சர் மார்கோ புஷ்மேன் “இஸ்ரேலிய மக்கள் மீது ஹமாஸ் நடத்தும் பயங்கர தாக்குதல்களைத் தொடர்ந்து, யூத நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் சமீப வாரங்களில் ஜெர்மனியிலும் அதிகரித்துள்ளன.
எனவே நம் நாட்டில் உள்ள யூதர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக பயப்பட வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.