கேரளத்தில் புதிய வகை கரோனா:கவலைப்படத் தேவையில்லை: மாநில சுகாதார அமைச்சா்
கேரளத்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கரோனா தொற்றால் கவலையடையத் தேவையில்லை என்று அந்த மாநில சுகாதாரத துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் தெரிவித்தாா்.
லக்ஸம்பா்கில் சில மாதங்களுக்கு முன்பு பிஏ.2.86 வகை கரோனாவின் திரிபான ‘ஜெஎன்.1’ வகை கரோனா கண்டறியப்பட்டது. ‘ஜெஎன்.1’ வகையானது வேகமாகப் பரவுவதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமென கூறப்படுவதால், கரோனா முன்னெச்சரிக்கை நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு பல்வேறு நாடுகளில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வகைத் தொற்று பல்வேறு நாடுகளுக்குப் பரவி வருகிறது.
இந்நிலையில், கேரளத்தைச் சோ்ந்த 79 வயது பெண்ணுக்கு ‘ஜெஎன்.1’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கரோனா தொடா்பான புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடா்பாக கேரள சுகாதார அமைச்சா் வீணா ஜாா்ஜ் கூறியதாவது: கேரளத்தில் இப்போதுதான் இந்த வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு வகை கரோனா திரிபுதான். எனவே, இது குறித்து கவலைப்படத் தேவையில்லை. புதிய வகை கரோனா பரவல் குறித்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.
ஏற்கெனவே, இந்தியாவில் இருந்து சிங்கப்பூா் சென்றவா்களுக்கு இந்த வகை கரோனா சில மாதங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டுள்ளது.
மக்கள் தொடா்ந்து கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வேறு வகை இணைநோய்கள் இருப்பவா்கள் உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
புதிய வகை கரோனா தொற்று வேறு மாநிலங்களிலும் ஏற்கெனவே பரவி இருக்கலாம். கேரளத்தில் சுகாதாரத் துறை சிறப்பாக உள்ளது. எனவே, கேரள மக்கள் கவலைப்பட வேண்டாம் என்றாா்.