ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ.6000 – நீங்கள் இதைத்தான் செய்ய வேண்டும்!
குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்படும்.
வெள்ள நிவாரணம்
டிசம்பர் 3 மற்றும் 4 தேதிகளில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது.
பெரும்பாலான பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், இன்னும் சில பகுதிகளில் மழைநீர் வடியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
முக்கிய தகவல்
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6,000 வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்தத் தொகையினை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை சென்னையில் இல்லாமல் பிற மாவட்டத்தில் இருந்தால்,
அவர்களுக்கு ரேஷன் கடைகளில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த விண்ணப்பத்தில் வங்கி எண் மற்றும் அவர்கள் வாழ்ந்த பகுதியின் பெயர் ஆகியவற்றை பூர்த்தி செய்து கொடுத்தால், அதனை அதிகாரிகள் ஆய்வு செய்து உண்மையிலேயே பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.