பயணியின் காதை கடித்து விழுங்கிய பேருந்து நடத்துனர்
கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றின் நடத்துனர் ஒருவருக்கும் பயணி ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பயணியின் வலது காதை கடித்து விழுங்கிதாக கூறப்படும் பேருந்து நடத்துனர் மீகொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (2023.12.17) இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர் கல்கமுவை பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய பேருந்து நடத்துனராவார்.
மேலதிக விசாரணை
சம்பவத்தின் போது பேருந்து நடத்துனர் பயணிகளிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டிருந்த நிலையில் சன நெரிசல் அதிகரித்ததால் அதே பேருந்தில் பயணித்த ஒரு பயணியிடம் பேருந்து பின்புறம் செல்லுமாறு கூறியுள்ளார்.
பேருந்து நடத்துனர் பல முறை கூறியும் அவர் பின்புறம் செல்லாததால் இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் எல்லை மீறியதில் பேருந்து நடத்துனர் குறித்த பயணியை தாக்கிவிட்டு அவரது வலது காதை கடித்து விழுங்கி காயப்படுத்தியுள்ளார்.
காயமடைந்தவர் தனது காதில் ஒரு பகுதி இல்லை என்பதை அறிந்ததும் மீகொடை பொலிஸ் நிலையத்தில் பேருந்தை செலுத்துமாறு கூறி இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து பேருந்து நடத்துனர் மீகொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் காயமடைந்தவர் மீகொடை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக மஹாரகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.