புதிய அதிபர் நியமனத்தில் அநீதி: யாழ். இலங்கை ஆசிரியர் சங்கம் விசனம்
யாழ்ப்பாணத்தில் புதிய அதிபர் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கம் வடக்கு ஆளுநருக்கு மனு ஒன்றை கையளித்துள்ளது.
இதன் போது வடக்கு ஆளுநர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு நேற்று(18) குறித்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் சேவையில் இருந்து அதிபர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டவர்கள் புதிய அதிபர் நியமனத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புள்ளியிடல் முறை மூலம் வழங்கப்பட்ட நியமனத்தை எதிர்ப்பதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கையளிக்கப்பட்ட மகஜர்
அத்துடன் கல்வி அமைச்சின் செயலாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஆகியோருக்கும் மனுவின் பிரதி கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுவில்,
“2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பரீட்சைப் புள்ளியின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டு, 4 வருட தாமதத்தின் பின்னரான நிலைப்படுத்தலில் பரீட்சைப் புள்ளியின் அடிப்படையில் மாத்திரம் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதனை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றோம்.
காரணங்கள் பின்வருமாறு, ஒரே பரீட்சையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அதிபர்களுக்கு இரு வேறு நியதிகளின் அடிப்படையில் நியமனம் வழங்கியமை (முதற்கட்ட நியமனத்தின் போது வெளிமாவட்ட சேவை கருத்தில் கொள்ளப்பட்டு அதே மாவட்டத்தில் நியமனம் வழங்கியமை), வெளிமாவட்ட சேவையை கருத்தில் கொள்ளாமை(ஆகக் குறைந்தது 5,7,10,15வருடங்கள்),பொருத்தமான மருத்துவக் காரணங்களைக் கருத்திற் கொள்ளாமை என்பன மனுவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் கணவன் மனைவிக்கிடையிலான நியமனம் இருவேறு மாவட்டம், வயது மற்றும் சேவை மூப்பு கருத்திற் கொள்ளாமை, கணவன் அல்லது மனைவி மருத்துவத்துறையின் கருத்தை கருத்தில் கொள்ளாமை, தனித்து வாழும் குடும்பங்களின் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்திற் கொள்ளாமை, கணவன் அல்லது மனைவியின் வெளிமாவட்ட சேவை நிலையத்தைக் கருத்திற் கொள்ளாமை போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, கடமை நிறைவேற்று அதிபர்களின் பிரச்சினை தீர்க்கப்படாமல் அந்த பாடசாலைகளுக்கு முரண்பாட்டைத் தோற்றுவிக்குமுகமாக நியமனம், 14 நாள் கால அவகாசம் தந்தும் கையொப்பமிட அனுமதிக்காமை, 192 புள்ளி பெற்றவருக்கு ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் பாடசாலையும் 188 புள்ளிகளைப் பெற்றவருக்கு கலட்டி அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலையும் வழங்கப்பட்டுள்ளது, திருமணமாகாத பெண் அதிபர்களின் நனிலமை கருத்திற் கொள்ளப்படாமை போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.