கப்பல்களுக்கு அனுமதி இல்லை! சீனக் கப்பல் தொடர்பில் ரணில் அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு
புவிசார் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், நாட்டின் கடல் பகுதியில் வெளிநாட்டு கப்பல்கள் ஆய்வுகளை மேற்கொள்வதனை ஒரு வருட காலத்திற்கு நிறுத்தி வைக்க இலங்கை முடிவு செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அதன்படி, அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் முதல் இலங்கையின் கடற்பரப்பில் மற்றுமொரு ஆய்வுக் கப்பலை நிறுத்துவதற்கு சீனா அனுமதி கோரியதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்ததன் பின்னர் சம்பந்தப்பட்ட நாடுகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளது.
புவிசார் அரசியல்
இவ்வாறான ஆய்வு நடவடிக்கைகளின் போது இலங்கையும் சமமான பங்காளிகளாக பங்குபற்றுவதற்காக இலங்கை சில திறன் மேம்பாடுகளைச் செய்ய வேண்டியிருப்பதனால் பிற நாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், இலங்கையும் அடுத்த ஆண்டு (2024) தேர்தலை எதிர்கொள்ள இருப்பதனால், புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களைக் கையாள்வதில் எந்த நாட்டையும் பகைத்துக்கொள்ளாமல் செயல்பட முற்படுகிறது எனவும் அவர் கூறினார்.
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி
தவிர, நாட்டிற்கு வரும் வெளிநாட்டு இராணுவக் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கான நிலையான செயற்பாட்டு நடைமுறையை (SOP) இலங்கை உருவாக்கியுள்ளது.
இதனால் கடந்த பத்து வருடங்களில் இலங்கை கடற்பரப்பிற்கு தமது கப்பல்களை அனுப்பிய அனைத்து நாடுகளுக்கும் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கான நிலையான செயற்பாட்டு நடைமுறையின் கீழ் அமைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் சீன ஆய்வு மற்றும் ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி கடந்த ஒக்டோபரில் இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தில் வந்து, இந்தியப் பெருங்கடலின் நீர்நிலையில் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (NARA) இணைந்து ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.