அவையில் இல்லை – வாரணாசியில் உரையாற்றும் மோடி, அமித் ஷா – எதிர்க்கட்சிகள் போராட்டம்!!
மக்களவை அத்துமீறலை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களவை விவகாரம்
சென்ற வாரம், எம்.பி.க்கள் அரங்கிற்குள் இருவர் அத்துமீறி நுழைந்து புகை குண்டுகளை வீசிய சம்பவம் தற்போது வரை நாடாளுமன்றத்தின் அவைகளில் எதிரொலித்து வருகின்றது.
இந்நிலையில், உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவரும் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் ராகுல் காந்தி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
ஆகியோர் கையில் எங்களை கூண்டில் அடைக்க முடியாது – ஜனநாயகம் முடக்கப்பட்டுள்ளது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் கார்கே, “நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது சரியல்ல என்று கூறி, இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்று சாடினார்.
அவைக்கு வரவில்லை
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் கருத்துகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்கள் என்று விளக்கமளித்த அவர், பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரில் ஒருவர் நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்.
ஆனால், இருவருமே அவைக்கு வர மறுக்கிறார்கள் என்று குற்றம்சாட்டிய கார்கே, நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கும்போது அவைக்கு வராமல், வாரணாசியிலும், அகமதாபாத்திலும் உரைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.