யாழ்.பல்கலைக்குள் அரைக்காற்சட்டையுடன் செல்ல முற்பட்ட நபர் ; வைரலாகியுள்ள காணொளி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் நபரொருவர் அரைக் காற்சட்டையுடன் நுழைய முற்பட்டமை சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழாவின் சில திரைப்படங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் திரையிடப்படுகிறது.
இந்நிலையில், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அரைக் காற்சட்டையுடன் வந்தவருடன் வந்த குழு ஒன்று திரைப்படத்தை பார்வையிட
பல்கலைக்கழகத்திற்கு உள்ளே அனுமதிக்குமாறு கோரவே பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதனை மறுத்து
அரைக் காற்சட்டையுடன் நுழைய முடியாது என பல்கலைக்கழக நடைமுறையை கூறினர்.
இதன்போது அரைக் காற்சட்டையுடன் வந்தவருடன் உடனிருந்த சிலர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டு அதனை காணொளி எடுத்து அச்சுறுத்தி பல்கலைக்கழகத்திற்கு உள்ளே நுழைய முயன்றனர்.
இறுதியில் பல்கலைக்கழக மேலதிகாரிகளுடன் நீங்கள் சென்று கதைக்கலாம். ஆனால் அரைக் காற்சட்டையுடன் எவரும் உள்ளே நுழைய முடியாது என பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உறுதியாக தெரிவித்தனர்.
இதன்போது அங்கு வந்த பல்கலைக்கழக பதிவாளரும் அதே நிலைப்பாட்டை தெரிவிக்கவே, ஏமாற்றமடைந்த குறித்த குழு பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து சென்றனர்.
குறித்த குழுவினர் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்ட காணொளியை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து
“யாழ் பல்கலைக்கழகத்தின் கலாசாரம் பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருப்பவர்களின் காற்சட்டையில் தொங்கிக்கொண்டிருப்பது தான் துயரம்” என தெரிவித்து பகிர்ந்திருந்தனர்.
இந்நிலையிலேயே உயர் கல்வி நிறுவனங்களுக்கு செல்வதற்கான நடைமுறை தெரியாதா? பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது எந்த தவறும் இல்லை எனவும், கடமைக்கு இடையூறு விளைவித்ததன் அடிப்படையில் குறித்த நபர்களுக்கு எதிராக பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஊடகங்களில் வலுத்து வருகிறது.