பரீட்சைகள் திணைக்களத்தின் அசமந்தம்; கடும் சிரமத்திற்குள்ளான ஆசிரியர்கள்
புலமைப்பரிசில் பெறுபேறுகள் மீள் மதிப்பீட்டுக்காக வருகை தந்த ஆசிரியர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படாத காரணத்தினால் இன்று (2023.12.20) காலை பரீட்சை திணைக்களத்திற்கு அருகில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
வினாத்தாள் மதிப்பீட்டிற்காக தூர மாகாணங்களில் இருந்து வருகை தந்த ஆசிரியர்களுக்கு நேற்றிரவு (19) வரை தங்குமிட வசதி மற்றும் ஏனைய வசதிகள் செய்து கொடுக்கப்படாமையால் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில ஆசிரியர்கள் தங்கும் இடங்களைத் தேடி பெரும் பணத்தைச் செலவு செய்ததாகவும், அவ்வாறு பணம் செலவழித்து இவ்வாறான செயற்பாட்டை மேற்கொள்வது கடினம் எனக் கூறி இன்று (20) வினாத்தாள் மீள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்து விலகினர்.
புலமைப்பரிசில் பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்காக நாடளாவிய ரீதியில் வினாத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு மூன்று நாட்களுக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பரீட்சை திணைக்கள அதிகாரிகள் தங்களை மிகவும் தரக்குறைவாக நடத்தியதாகவும், பரீட்சை திணைக்கள அதிகாரிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றதாகவும் ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அப்போது, பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் வந்து தலையிட்டு மீண்டும் மதிப்பீட்டு பணிக்கு ஆசிரியர்களை அழைத்து சென்று பிரச்சினையை தீர்த்து வைத்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.