புதிய வகை கரோனா திரிபு: முதியவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
கரோனா திரிபான ஜெஎன்.1 வகை வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதன் காரணமாக, முதியவர்கள் முகக்கவசம் அணியவும், கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தடுக்கவும் கர்நாடக அரசு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
நாட்டில் புதிய வகை கரோனா திரிபான ‘ஜெஎன்.1’-ஆல் பாதிக்கப்பட்ட முதல் நபா் கேரளத்தில் கண்டறியப்பட்டதையடுத்து மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.
இன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் காணொலி மூலம் மாநில அரசுகளை தொடர்ந்து கொண்டு முக்கிய ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
இதற்கிடையே, கேரளத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும் கரோனா அதிரித்து வரும் நிலையில், கர்நாடக மாநில அரசு பல்வேறு துறைகளுக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. மற்றும் மக்களுக்கு அறிவுறுத்தலும் அளித்துள்ளது. எனினும், பொதுமக்கள் ஓரிடத்தில் ஒன்றுகூட தடை விதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மாநிலம் விட்டு மாநிலம் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்படவில்லை. நிலைமையை கவனத்துடன் கண்காணித்து வருகிறோம். மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறுமா என்று கண்காணிக்கிறோம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டூ ராவ் தெரிவித்துள்ளார்.
மேலும், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், இதய நோய், நீரிழிவு போன்ற இணை நோய் உடையவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் அனைவரும் வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், கதவுகள் மூடப்பட்ட, காற்றோட்டம் குறைவான, கூட்டம் அதிகமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துவிடுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.