யாழில் பாடசாலைக்கருகில் போதைப்பொருள் விற்பனை ; சிக்கிய 15 மாணவர்கள்
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் போதைப்பொருளை கொள்வனவு செய்த 15 மாணவர்கள் இனம்காணப்பட்டு கடுமையாக எச்சரித்த பொலிஸார், போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை வழங்கி பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மாணவர்களை எச்சரித்த பொலிஸார்
யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் , யாழ்.புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில், மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் , போதை கலந்த பாக்குகள் , மாவா பாக்கு உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , அவர்களிடம் இருந்து போதைப்பொருளை வாங்கி சென்ற மாணவர்களை பொலிஸார் இனம் கண்டு கொண்டனர்.
இனம் காணப்பட்ட சுமார் 15 மாணவர்களையும் பொலிஸார் கடுமையாக எச்சரிக்கை செய்து, பெற்றோர்களிடம் கையளித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட 06 இளைஞர்களையும் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.