;
Athirady Tamil News

அரச பேருந்து ஊழியர்களின் திடீர் பணி புறக்கணிப்பு: சிரமத்தை எதிர்நோக்கும் பொதுமக்கள்

0

போக்குவரத்துசபை பேருந்து சாரதி ஒருவர் தாக்கப்பட்டுள்ள நிலையில் அவரை தாக்கியவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு இலங்கை போக்குவரத்துசபை டிப்போக்களில் பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

18 ஆம் திகதி மாலை கொக்கட்டிச்சோலை பகுதியில் வைத்து இலங்கை போக்குவரத்துசபையின் மட்டக்களப்பு டிப்போவின் சாரதி ஒருவர் தனியார் பேருந்து சாரதி மற்றும் உதவியாளர்களினால் தாக்குதலுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று (19) முதல் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபை டிப்போ ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று (20) மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபை டிப்போ ஊழியர்கள் பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வரும் நிலையில் களுவாஞ்சிகுடி, வாழைச்சேனை, ஏறாவூர் ஆகிய டிப்போ ஊழியர்களும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த நிலையில் பொலிஸார் அசமந்த போக்குடன் செயற்படுவதன் காரணமாகவே தமது பணி பகிஷ்கரிப்பு போராட்டம் தொடருவதாகவும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தால் தாங்கள் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என மட்டக்களப்பு டிப்போ ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் போராட்டம் காரணமாக மட்டக்களப்பின் இலங்கை போக்குவரத்துசபை பஸ்களின் சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக பாடசாலை செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.