அதிகரிக்கும் புதியவகை கொரோனா திரிபு JN.1: இந்திய அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆய்வு கூட்டத்தை நடத்தியது.
புதியவகை கொரோனா JN.1
இந்தியா முழுவதும் கடந்த சில தினங்களாக JN.1 என்ற வகை கொரோனா திரிபு பரவி வருகிறது. இந்த கொரோனாவால் தற்போது வரை 614 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையும் 2,311 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 292 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
தடுப்பு நடவடிக்கைகள்
இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “புதிய வகை கொரோனா தொற்று குறித்து யாரும் பீதியடைய தேவையில்லை. சீனா, பிரேசில், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் JN.1 என்ற வகை கொரோனா திரிபு அதிகரித்து வருகிறது.
இதனால், அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதையும், ஆக்சிஜன் சிலிண்டர்கள், சுவாச கருவிகள் போன்றவை இருப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று பேசியுள்ளார்.