பேஸ்புக் நிறுவனத்திற்கு இலங்கை நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இணையதளத்தை பயன்படுத்தி பௌத்த மதத்தையும், கௌதம புத்தரையும் இழிவுபடுத்தும் வகையில் பதிவுகளை இட்ட முகநூல் கணக்குகள் பற்றிய தகவல்களை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்ற விசாரணை திணைக்களத்தின் கணனி குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் டி.என்.எல் இலங்கசிங்க இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு
இணையதளத்தை பயன்படுத்தி புஸ் புத்தா (Puss Buddha) மற்றும் புஸ் புத்தா பின்தொடர்பாளர்கள் (Followers of Puss Buddha) ஆகிய பெயர்களில் முகநூல் கணக்குகள் உருவாக்கப்பட்டு அதன் ஊடாக பௌத்த மதத்திற்கும், கௌதம புத்தருக்கும் இழிவு ஏற்படுத்தும் வகையிலான பதிவுகள் இடப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குற்ற விசாரணை பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகள் தொடர்பிலான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான், குற்ற விசாரணை பிரிவிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.