வடக்கில் அதிபர் நியமன செயற்பாட்டில் பாரிய குழப்ப நிலை: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
தேசிய ரீதியாக அண்மையில் வழங்கப்பட்ட அதிபர் தரம் மூன்றிற்கான நியமனத்தின் பின்னர் வடமாகணத்தில் சரியான முறையில் பாடசாலைகள் பிரதேச ரீதியாக பகிர்ந்தளிக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ரீதியில் 174 வெட்டுப் புள்ளிகளைப் பெற்று அதிபர் பரீட்சை போட்டியில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் தூரப்பிரதேசங்களுக்கு சேவைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
மேலும், அதிக புள்ளிகளைப் பெற்ற அதிபர்கள் கஷ்டப் பிரதேசங்களுக்கும் குறைந்த புள்ளிகளை பெற்ற உபஅதிபர்கள் அவர்களது சொந்த பிரதேசங்களிலும் உள்ள பாடசாலைகளிலும் கடமையாற்றுவதற்கு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அனுமதி வழங்கி இருப்பதாக தெரிவித்தனர்.
இவ்வாறு வழங்கப்பட்ட அனுமதியினால் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பேருந்து கட்டணம், ஏனைய செலவுகள் என்பவற்றை ஈடு கொடுக்க முடியாத வகையில் அதிபர்கள் திண்டாடுவதாக இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் யாழ்.மாவட்ட செயலாளர் ஜெ.வோல்வின் சுட்டிக்காட்டினார்.
“இவ்வாறு வழங்கப்பட்ட நியமனம் தொடர்பிலே வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அதிபர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை தொடர்பில் மாற்றத்தினை கொண்டு வர வேண்டும்.
வெட்டுப் புள்ளிகள் தொடர்பில் மறு பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளதாகவும் இதற்கான சரியான தீர்வு கிடைக்காதவிடத்து தாம் தொழிற்சங்க நடவடிக்கையினை மேற்கொள்ள நேரிடும்.” எனவும் இதன்போது வோல்வின் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்தில் கொண்டு தமக்கு தீர்வினை பெற்று தருவதாக தெரிவித்திருப்பதாகவும் இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் சரத் ஆரிய நந்த தெரிவிததுள்ளார்.