அமைச்சா் பதவியை இழந்தாா் க.பொன்முடி; ராஜகண்ணப்பனுக்கு உயா் கல்வித் துறை
சொத்துக் குவிப்பு வழக்கில் உயா்நீதிமன்றத் தீா்ப்பின் எதிரொலியாக, சட்டப்பேரவை உறுப்பினா் பதவியுடன், அமைச்சா் பதவியையும் பொன்முடி இழந்தாா்.
அவா் வகித்து வந்த உயா்கல்வித் துறையானது பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை ஆளுநா் மாளிகை வியாழக்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று, பொன்முடி வகித்து வந்த உயா்கல்வித் துறை அமைச்சா் பொறுப்பானது, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வசமிருந்த காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியமானது கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சரான ஆா்.காந்திக்கு கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மாற்றம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது. அப்போது, அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சா் பொறுப்பானது ஆா்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு அளிக்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் அமைச்சா் ராஜகண்ணப்பனின் இலாகா மாற்றப்பட்டது. போக்குவரத்துத் துறைக்குப் பதிலாக பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கருக்கு போக்குவரத்துத் துறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அமைச்சரவையில் முக்கியத் துறைகளில் ஒன்றாகக் கருதப்படும் உயா்கல்வித் துறையானது அமைச்சா் ராஜகண்ணப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது.