பரிகாரம் பூசை செய்வதாக கூறி நகைகளை அபகரித்த இந்தியர்கள் -கல்முனையில் சம்பவம்
உணவக உரிமையாளரது மனைவியான காசாளரான பெண்ணிடம் பரிகாரம் பூஜை செய்வதாக கூறி 8 பவுணுக்கு அதிகமான நகைகளை அபகரித்து தலைமறைவாகியுள்ள இரு இந்தியர்கள் குறித்து கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உணவகம் ஒன்றில் கடந்த புதன்கிழமை(20) இரவு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் மறுநாள் (21) பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவ தினமான அன்று இரு இந்தியர்கள் பரிகார பூஜை தொடர்பாக இருவேறு சந்தர்ப்பங்களில் உணவக உரிமையாளரது மனைவியான பெண்ணிடம் உரையாடியுள்ளனர்.இதற்கமைய குறித்த பரிகார பூஜை தொடர்பில் சம்பவ தினமன்று இரவு குறித்த உணவகத்திற்கு வருகை தந்த இரு இந்தியர்களும் தனிமையில் இருந்த பெண்ணை அணுகி பரிகார பூஜை தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் போது குறித்த பூஜைக்கு இணங்கிய அப்பெண் தன்னிடம் இருந்த தங்க மாலை உள்ளடங்கலாக ஏனைய நகைகளை ஒரு மண் சட்டியில் இரு இந்தியர்களும் குறிப்பிட்டபடி மண்சட்டியில் போட்டு மூடி பூஜைக்கு கொடுத்துள்ளார்.
இவ்வாறு பூஜை இடை நடுவில் சென்ற போது பூஜைக்காக கொள்வனவு செய்யப்பட்ட தேசிக்காய் ஒன்றினை வீட்டின் உள்ளே வைக்குமாறு அப்பெண்ணை வேண்டியுள்ளனர்.
உடனடியாக அத்தேசிக்காயை பெற்ற அப்பெண் வீட்டின் உள்ளே சென்று பரிகாரம் நிறைவேற அதை வைத்துவிட்டு வந்துள்ளார்.அச்சமயம் உடனடியாக செயற்பட்ட இரு இந்தியர்களும் ஏற்கனவே தயாராகி கொண்டு வந்த பிறிதொரு மூடப்பட்ட மண்சட்டியை அவ்விடத்தில் மாற்றியதுடன் பூஜையை நிறுத்தி பின்னர் தங்க நகை அடங்கிய மண்சட்டியை தம்வசம் எடுத்து கொண்டு உணவக உரிமையாளரது மனைவியான காசாளரான பெண்ணிடம் 3 நாட்களில் பின்னர் மண்சட்டியை திறந்து பார்க்குமாறு கூறி விடை பெற்று சென்றுள்ளனர்.
பின்னர் குறித்த உணவகத்திற்கு வந்த உணவக உரிமையாளர் தனது மனைவியான காசாளரிடம் கழுத்தில் கிடந்த நகை எங்கே என்று கேட்டுள்ளார்.இதன்போது நடந்த அனைத்து விடயங்களையும் அப்பெண் கூறியுள்ளார். உடனடியாக செயற்பட்ட உணவக உரிமையாளர் 2 இந்தியர்களால் தனது மனைவியிடம் 3 நாட்களின் பின்னர் திறக்க கூறிய மண்சட்டியை திறந்து பார்த்துள்ளார்.
அங்கு அவர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது.உடனடியாக 2 இந்தியர்கள் குறித்து தேடுதல் மேற்கொண்ட பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றத்துடன் கல்முனை பொலிஸ் நிலையத்தில் இறுதியாக முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர்.