மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் யாழ் போதனா வைத்தியசாலை செயற்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
யாழ் போதான வைத்தியசாலையின் செயற்பாடு வினைத்திறன் மிக்கவையாக முன்னெடுப்பதற்கான சூழலை உருவாக்கி, மக்களின் மனங்களில் வைத்தியசாலை தொடர்பான நம்பிக்கையை வலுப்படுத்துவதே தன்னுடைய எதிர்பார்ப்பு என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலைக்கான விஜயத்தினை இன்று மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புதிதாக நியமிக்கப்பட்ட வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலை நிர்வாத்தினருடனான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், பல்வேறு ஏக்கங்களுடன் வைத்திய சேவையினை எதிர்பாத்து வருகின்ற மக்களுக்கு நம்பிக்கையினை ஏற்படுத்த வகையில் வைத்தியசாலையின் உட்கட்டுமானங்களும், வைத்திய பராமரிப்புக்களும், நிர்வாக செயற்பாடுகளும் அமைவதை உறுதிப்படுத்த வேண்டும். இதன்மூலம் முதற்கட்டமான பரிகாரத்தினை நோயாளர்களுக்கு வழங்க முடியும்.
அண்மை நாட்களில் வைத்தியசாலையில் இடம்பெற்ற சில துரதிஸ்ட சம்பங்கள் போன்று எதிர்காலத்தில் நடைபெறாது இருப்பதை வைத்தியசாலையுடன் சம்மந்தப்பட்ட ஒவ்வொருவரும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே என்னுடை எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது.
அதனை புரிந்து கொண்டு, வெறுமனே கடமையை செய்வதாக கருதாமல், ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற சமூகப் பொறுப்பினை உணர்ந்து செயற்படுவோமாக இருந்தால், ஒரு சிறந்த வைத்தியசாலையாக எமது இந்த வைத்தியசாலையை செயற்படுத்த முடியும்.
இந்த வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக உடனுக்குடன் எனது கவனத்திற்கு கொண்டு வரப்படும் பட்சத்தில், துறைசார் அமைச்சரினதும் அமைச்சரவையினதும் கவனத்திற்கு கொண்டு சென்று அவற்றை நிவர்த்தி செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை என்னால் மேற்கொள்ள முடியும்” எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
2010 – 2015 ஆம் ஆண்டு வரை பாரம்பரிய சிறுகைத்தொழில் அமைச்சராக செயற்பட்ட காலப் பகுதியில் அமைச்சரினால் யாழ் போதனா வைத்தியசாலையில் உருவாக்கப்பட்ட அபிவிருத்திக் குழு வெற்றிகரமாக செயற்பட்டு வந்த நிலையில், 2015 – 2019 வரையான காலப் பகுதியில் வடக்கு நிர்வாகத்தினை கையாண்டவர்களின் வினைத்திறனற்ற செயற்பாடுகளினால் வைத்தியசாலை செயற்பாடுகள் பின்னடைவை சந்தித்து இருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.