தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்கும் கொரோனாத் தொற்று
இந்தியாவில் தலைதூக்கி வரும் கொரோனாத் தோற்றால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளதாக இந்தியாவின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் வாரத்தில் சிங்கப்பூரில் ஒரே நாளில் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
அந்த அதிர்வு ஓய்வதற்குள் கடந்த 14 ஆம் திகதி கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது, அவர்களின் குருதி மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அது ‘ஜே.என்.- 1’ என்ற உறுமாறிய புதுவகை கொரோனா வைரஸ் என தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வேகமாக பரவி வந்த இந்த திரிப்படைந்த வைரஸ் தொற்று தமிழ் நாட்டிலும் பரவலடைய ஆரம்பித்துள்ளது.
உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை
அதன்படி, சென்னை மாவட்டத்தில் 14 பேருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 3 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 பேருக்கும், கோவை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மேலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது.
ஆனால் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
2 ஆண்டுகளுக்குப் பிறகு
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அடுத்த சில மாதங்களில் உலகம் முழுவதும் பரவி மக்களை பெரும் இன்னலுக்குள்ளாக்கியிருந்தது.
இதன்போது பொது முடக்கம், பயணக் கட்டுப்பாடுகள் ஆகியைவை நடைமுறைப்படுத்தப்பட்டு, பொருளாதார ரீதியாகவும் கடுமையான பாதிப்பை கொரோனா ஏற்படுத்தியது.
இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்து தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதன் பிறகு தொற்றின் தாக்கம் சற்று ஓயத்தொடங்கியது, இடையில் அவ்வப்போது உருமாறிய கொரோனா பரவினாலும் அதன் தாக்கம் அவ்வளவாக வெளிப்படாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளமை மக்களிடையே அச்சத்தை எதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.