“தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது” மத்திய அரசு திட்டவட்டம்
தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் கரை புரண்டு ஓடுவதாலும் குளங்கள் நிரம்பி உடைந்ததால் வெளியேறிய தண்ணீராலும் தூத்துக்குடி மாவட்டத்தின் பல கிராமங்கள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
கடும் சிரமம்
குளங்களில் இருந்து வெளியேறிய தண்ணீர் வயல்வெளிகள் மற்றும் தாழ்வான இடங்களில் தேங்கி நிற்பதால் அதனை அகற்றுவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ள போதிலும் ,இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்தநிலையில், இந்தியாவில் இதற்கு முன்னர் தேசிய பேரிடர் என்ற ஒன்று இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பதால், தமிழ் நாட்டு வெள்ள அனர்த்தத்தையும் தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மழைநீர் வடிகால் பணிகளை முறையாக மேற்கொண்டிருந்தால் இவ்வளவு பிரச்சனை ஏற்பட்டிருக்காது என டெல்லியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய பேரிடர்
சென்னையில் 4 ஆயிரம் கோடியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் குறித்து முரணான கருத்தை தமிழ் நாட்டு அமைச்சர்கள் கூறியதாகவும் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றிருந்தால் இந்த நிலை வந்திருக்காது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தாமதமாக எச்சரிக்கை வழங்கியது என்ற குற்ச்சாட்டை ஏற்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
மத்திய அரசு வழங்கிய நிதியை தமிழ் நாட்டு அரசு உரிய முறையில் செலவு செய்யவில்லை எனவும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட போது மு.க.ஸ்ராலின் டெல்லியில் கூட்டணி பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தார் எனவும் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டியுள்ளார்.