புதுக்குடியிருப்பில் 15 இலட்சம் பெறுமதியான பாலை மரக் குற்றிகள் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இரகசியமான முறையிலே கடத்திச் செல்லப்பட்ட சுமார் 15 இலட்சம் பெறுமதியான பாலை மரக் குற்றிகள் புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர். கேரத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் குறித்த பகுதியில் காவல்துறையினர் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
15 இலட்சம் பெறுமதியான
இதன்போது டிப்பர் வாகனத்தில் பாலை மரக் குற்றிகளை அடுக்கி, அதற்கு மேலே சல்லிக்கற்களை போட்டு மறைத்து மிகவும் சூட்சுமமான முறையிலே பாலைமர குற்றிகள் கடத்திச் செல்லப்பட்டன.
காவல்துறையினர் வாகனத்தை சோதனையிட்டபோது குறித்த வாகனத்தில் இருந்து சுமார் 15 இலட்சம் பெறுமதியான பாலை மரக் குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தல்
இந்நிலையில் குறித்த டிப்பர் வாகனத்தையும் அதனுடைய சாரதியையும் காவல்துறையினர் கைதுசெய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை குறித்த நபரையும் சான்று பொருட்களையும் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.