கொடுத்த கடனால் பரிதாபமாக பறிக்கப்பட்ட உயிர்: இந்தியர்கள் உட்பட மூவரின் கொடுஞ்செயல் அம்பலம்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த நபர், கடன் கொடுத்த பணத்தை வாங்க சென்ற நிலையில், மூன்று வாரங்களுக்கு பிறகு சடலமாக மீட்கபட்டுள்ளார்.
கடனாக கொடுத்துள்ள 315,000 டொலர் தொகை
தொடர்புடைய விவகாரத்தில் இந்தியர்கள் இருவருடன் மூவர் கைதாகியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. புளோரிடா மாகாணத்தை சேர்ந்த 36 வயது சுரேன் சீதல் என்பவரே கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடனாக கொடுத்துள்ள 315,000 டொலர் தொகையை திருப்பி வாங்க சென்ற நிலையிலேயே, நவம்பர் 2ம் திகதி மாயமானார். விமான மெக்கானிக்கான சுரேன் கொலை வழக்கில் தற்போது 29 வயதான சோம்ஜீத் சிங், 24 வயது ஆவின் சீதாராம் மற்றும் 18 வயது கவின் ஹண்டர் ஆகியோர் கைதாகியுள்ளனர்.
இந்த மூவரில் ஒருவர் தான் சுரேனுக்கு 315,000 டொலர் தொகையை திருப்பித் தரவேண்டும் என்றும் கூறப்படுகிறது. நவம்பர் 2ம் திகதி வேலைக்கு செல்வதாக கூறி குடியிருப்பில் இருந்து சுரேன் வெளியேறியுள்ளார்.
ஆனால் அன்றும், அதன் அடுத்த நாளும் அவர் வேலைக்கும் செல்லவில்லை குடியிருப்புக்கும் திரும்பவில்லை. இந்த நிலையில் பயந்துபோன குடும்பத்தினர், சுரேன் காணாமல் போனதாக கூறி பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை
ஆனால் நவம்பர் 21ம் திகதி சுரேனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது காதலி தெரிவிக்கையில், சோம்ஜீத் சிங் என்பவரே சுரேனுக்கு கடன்பட்டவர் என்றும், அந்த பணத்தை திருப்பி வாங்கும் பொருட்டே சுரேன் முயன்று வந்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சுரேனை கொன்று விட்டு, கடனில் இருந்து தப்பிக்க சிங் தமது நண்பர்கள் இருவருடனும் திட்டமிட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், சுரேன், சிங் மற்றும் சீதாராம் ஆகிய மூவரும் இணைந்து பட்டாசு வியாபாரம் செய்துள்ளனர்.
மேலும், நவம்பர் 2ம் திகதி சுரேனின் அலைபேசி அணைக்கப்படும் வரையில் நால்வரும் ஒருவருக்கொருவர் அலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். மட்டுமின்றி சுரேனின் சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு அருகாமையில் சீதாராமின் அலைபேசியில் இருந்து அழைப்பு சென்றுள்ளதும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இதில் கவின் ஹண்டர் என்பவரே சுரேனை துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், சீதாராம், சிங் மற்றும் ஹண்டர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என்றே கூறப்படுகிறது.