மைத்திரி தரப்பை பலப்படுத்தும் புதிய நகர்வு: பேச்சுவார்த்தைக்கு தயாராகும் மொட்டு கட்சி
சிறிலங்கா பொதுஜன முன்னணியின் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சி பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட கருத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் இவ்வாறு மொட்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உப தலைவர் பதவி
மேலும்,அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வரும் சுதந்திரக் கட்சியின் அமைச்சர் ஒருவரின் தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
கட்சியில் இணைந்து கொள்ளும் மொட்டு கட்சி உறுப்பினர்களுக்கு தொகுதி அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து அவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு மொட்டு கட்சியிலிருந்து விலகி சுயாதீனமாக இயங்கி வரும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ள இணக்கம் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட தயாசிறி ஜயசேகரவிற்கு கட்சியின் உப தலைவர் பதவியை வழங்குவதற்கு மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
எனினும் இந்த விடயம் தொடர்பில் தயாசிறி ஜயசேகர தனது இணக்கப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என கூறப்படுகிறது.