ஆதித்யா எல்-1 விண்கலம் ஜன.6-இல் இலக்கை அடையும்
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், பூமியிலிருந்து சுமாா் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள அதன் இலக்கான லாக்ராஞ்சியன் புள்ளியில் (எல்-1) ஜனவரி 6-ஆம் தேதி நிலைநிறுத்தப்படும் என இஸ்ரோ தலைவா் எஸ். சோமநாத் தெரிவித்தாா்.
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக கடந்த செப்டம்பா்.2-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்திலிருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் செலுத்தப்பட்டது.
இந்நிலையில் குஜராத்தில் நடைபெற்ற பாரதிய அறிவியல் சம்மேளன நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஆதித்யா எல்-1 விண்கலம், பூமியிலிருந்து சுமாா் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள அதன் இலக்கான லாக்ராஞ்சியன் புள்ளியில் ஜனவரி 6-ஆம் தேதி நிலைநிறுத்தப்படவுள்ளது.
லாக்ராஞ்சியன் புள்ளியை அடைந்தவுடன் அதன் என்ஜினிற்கு மீண்டும் ஒருமுறை நெருப்பூட்ட வேண்டும். அப்போதுதான் இலக்கைத் தாண்டி அது பயணிக்காமல் தடுக்க முடியும். இலக்கை அடைந்தவுடன் விண்கலம் அதனைச் சுற்றி வந்து சரியான இடத்தில் நிலைநிறுத்தப்படும்.
இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகள் சூரியனில் நிகழும் அனைத்து விதமான மாற்றங்களையும் நாம் தெரிந்துகொள்ள முடியும். சூரியனில் நிகழும் மாற்றங்களால் அன்றாட மனித வாழ்வில் ஏற்படும் பாதிப்புகளை நாம் அறிந்து கொள்ளலாம்.
இத்தகவல்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே உதவிகரமாக இருக்கும்.
இந்த அமிா்த காலத்தில் பிரதமா் மோடியின் வழிகாட்டுதலின்படிஇந்தியாவிற்கென பிரத்யேகமாக விண்வெளி நிலையத்தை (பாரதிய விண்வெளி நிலையம்) அமைக்க இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது என்றாா்.