எந்த நாட்டிலும் இல்லாத வரி: திடீரென முடிவை மாற்றிய இலங்கை
இலங்கையில் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்த, செல்வ வரியை 2025 ஆம் ஆண்டு வரை ஒத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் செல்வ வரியை நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வலியுறுத்தியிருந்தது.
விசேட கோரிக்கை
எனினும், இலங்கை அரசாங்கம் நடத்திய ஆய்வில், உலகின் எந்தவொரு நாட்டிலும் தற்போது செல்வ வரி நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது.
எனவே, இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்த ஒரு மாதிரித் திட்டத்தை வழங்குமாறு இலங்கை ஏற்கனவே நாணய நிதியத்திடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளது.
மாதிரித் திட்டத்தை பெற்ற பிறகு, செல்வ வரி 2025ஆம் ஆண்டு முதல் செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
செல்வ வரி
செல்வ வரி (wealth tax) என்பது ஒருவரிடம் இருக்கும் செல்வத்தின் மதிப்பின்மீது விதிக்கப்படும் வரியாகும்.
ஒவ்வோர் ஆண்டும் மதிப்பீட்டு நாளில் ஒருவர் வைத்திருக்கும் செல்வத்தின் மதிப்பை பொருத்து இந்த வரி விதிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.