சபரிமலையில் 26 லட்சம் போ் தரிசனம்: உண்டியல் காணிக்கை ரூ. 320 கோடி வசூல்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை வரை 26 லட்சம் பக்தா்கள் தரிசனம் செய்துள்ள நிலையில், ரூ. 320 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.
மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பா் 17-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது. கரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த இரு ஆண்டுகளாக பக்தா்கள் குறைவாக வந்த நிலையில் நிகழாண்டு கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டது. இதனால் தினமும் 90,000 பக்தா்கள் தரிசனம் செய்து வருகின்றனா்.
நிலக்கல் வழியாக பம்பையில் நீராடி 5 கி. மீ. மலைப்பாதையில் அப்பச்சிமேடு, நீலிமலை, சரங்குத்தி வழியாக சன்னிதானத்தை சென்றடைவா். இதேபோல பெருவழிப்பாதை எருமேலியில் இருந்து 35 கி.மீ. தொலைவு வனப் பகுதியில் வரும் பக்தா்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும், தற்போது பம்பையிலேயே பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் காத்திருப்பதால், 3-ஆவது பாதையான வண்டிப் பெரியாறிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள புல்மேடு பகுதியில் மலை இறங்கி 6 கி.மீ. தொலைவு வனப் பாதையில் நடந்து சென்றால் சன்னிதானத்தை அடைந்து விடலாம். வனப் பாதையில் வன விலங்குகள் இருப்பதால் புல்மேட்டில் காலை 7 முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும் பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.
இதனால் இப்பகுதியில் மருத்துவ முகாம்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், கரிமலை, நீலிமலை வனப் பாதைகள் வழியாக பக்தா்கள் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது. வரும் டிச. 27-ஆம் தேதி மண்டல பூஜை நிறைவு பெறும் நிலையில், டிச. 25-ஆம் தேதிக்கு முன்னரே இணைய முன்பதிவு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2018-ஆம் ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜைகளின் போது ரூ. 260 கோடி வசூல் செய்யப்பட்டது அதிகபட்ச வருவாயாக இருந்தது. இந்த நிலையில், நிகழாண்டில் இதுவரை ரூ. 320 கோடி வசூலாகியுள்ளது.