;
Athirady Tamil News

மார்கழி இசை விழாவும் உள்ளூர் உற்பத்தியாளர்களது கண்காட்சியும் விற்பனையும்

0

மாபெரும் மார்கழி இசை விழாவும் வடமாகாணத்தைச் சேர்ந்த சிறிய, நடுத்தர உற்பத்தியாளர்களது கண்காட்சியும் விற்பனையும் மற்றும் வெளிநாட்டிற்கான சந்தைவாய்ப்பும் யாழ்ப்பாணத்தில் மார்கழி 27, 28, 29 ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

குறித்த தினங்களில் மாலை 4.45 முதல் இரவு 9.15 வரை மார்கழி இசைவிழா நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வர்த்தகக் கண்காட்சியானது புதன்கிழமை(27) காலை 10 மணிக்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இசைவிழாவும் சிறிய, நடுத்தர உற்பத்தியாளர்களது கண்காட்சியும் விற்பனையும் இந்தியத்துணைத்தூதரகம், நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் மற்றும் யாழ் வணிகர் கழகம் இணைந்து யாழ் மத்திய கலாசார மண்டபத்தில் நடத்தவுள்ளன.

இந்நிகழ்வில் புகழ்பூத்த இலங்கைக் கலைஞர்கள், இந்தியக் கலைஞர்கள் பங்குபற்றவுள்ளார்கள். மேலும் தவில் நாதஸ்வர இசைச்சங்கமம், விரலோசை வயலின் கச்சேரி, நாதசங்கமம், விரலிசை கானம், நாட்டிய நாடகம், மற்றும் இந்தியக் கலைஞர்களின் பரதநாட்டிய நடன நிகழ்ச்சி, நாட்டுக்கூத்து போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

அதே வேளை மண்டபத்தின் வெளிப்புறத்திடலில் காலை 9 மணிமுதல் இரவு 9.30 வரை சுமார் 140 காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டு வடமாகாணத்தைச் சேர்ந்த ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த சிறிய நடுத்தர உள்ளூர் உற்பத்தியாளர்களின் தரம் வாய்ந்த உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும், விற்பனையும், மற்றும் வெளிநாட்டிற்கான சந்தைவாய்ப்பும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது வடமாகாணத்தினைச் சேர்ந்த உற்பத்தியாளர்களின் மாபெரும் கண்காட்சியாக அமையவுள்ளது. இந்த இருநிகழ்வுகளுக்கான பிரவேசம் இலவசமானது.

ஆகவே வடமாகாண மக்களின் கலை கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்கும் இசைநிகழ்விலும், மற்றும் வடமாகாண உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்துவதன் மூலம் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யும் உள்ளூர் உற்பத்தியாளர்களை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற இருக்கும் வர்த்தகக் கண்காட்சிக்கும் பொதுமக்களாகிய தங்களனைவரையும் கலந்து கொள்ளுமாறு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ் வணிகர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.